மீண்டு வரும் அதானி குழுமம் - ரூ.7374 கோடி கடன்கள் அடைப்பு!
அதானி குழுமம் இந்திய வங்கிகளுக்கும், சர்வதேச வங்கிகளுக்கும் 7,374 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களை செலுத்தியுள்ளது. ஹிண்டன் பர்க் ஒற்றை அறிக்கையால் அதானி குழுமம் தொடர் சரிவை சந்தித்து வந்தது. இதனால் கெளதம் அதானி உலகப்பணக்கார பட்டியலில் இருந்து கீழ் இறங்கினார். மேலும், ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பின்பு அதானி குழும பங்குகள் தொடர் சரிவின் காரணமாக பங்குச்சந்தையில் இருக்கும் 10 அதானி குழும பங்குகளும் அதிகளவிலான சரிவை சந்தித்தது. இதன் மூலம் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 50 சதவீதத்திற்கும அதிகமாக சரிந்தது. எனவே, அதானி குழுமம் இந்திய வங்கிகளிடமும், சர்வதேச வங்கிகளிடமும் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது.
7 ஆயிரம் கோடி கடனை திருப்பி செலுத்திய அதானி குழுமம்
இதுமட்டுமின்றி, கடன் பத்திரங்கள் வாயிலாகவும் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது அதானி குழுமம். அதானி குழும சரிவால், முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக கடன்களை அடைத்து வருகின்றனர். இதற்காக சிங்கப்பூர், ஹாங் காங்கில் நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளது. இதனிடையே, பல்வேறு இந்திய வங்கிகளுக்கும், சர்வதேச வங்கிகளுக்கும் 7,374 கோடி ரூபாய் (901.16 மில்லியன் டாலர்) கடன்களை திருப்பிச் செலுத்தியுள்ளதாக அதானி குழுமம் இன்று தெரிவித்துள்ளது. இதனால், பங்கு வர்த்தகத்தின்போது அதானி நிறுவனங்களின் பங்குகள் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.