ஆதார் தகவல் மூலம் பணம் திருட்டு.. தடுப்பது எப்படி?
இன்றையக்கு இந்தியாவில் பெரும்பான்மையான அரசு நலத்திட்டங்களுக்கும், முக்கியமான பல்வேறு விஷயங்களுக்கும் மக்கள் ஆதார் அட்டையையே பிரதான ஆவணமாகப் பயன்படுத்துகிறார்கள். ஒரு சிம் கார்டு வாங்குவதில் இருந்து, EMI-யில் பொருட்களை வாங்குவது வரை பல்வேறு இடங்களிலும் நமது ஆதார் அட்டையைக் கொடுக்கிறோம். அந்த ஆதார் அட்டையின் தகவல்கள் திருடப்பட்டால், வங்கிக் கணக்கு உட்பட நம்முடைய பல்வேறு வகையான டிஜிட்டல் தகவல்களை நாம் இழக்க நேரிடும். இந்நிலையில், ஆதார் எண்ணை வைத்து புதிய மோசடி ஒன்று அரங்கேற்றப்பட்டு வருகிறது. ஆதாரைக் கொண்டு இயங்கும் பேமண்ட் முறையில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்தி பயனாளர்களின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை கொள்ளயடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் மோசடி நபர்கள்.
எப்படி கொள்ளையடிக்கிறார்கள்?
நம்முடைய ஆதார் எண், வங்கிக் கணக்கு தகவல்கள் மற்றும் கைரேகை ஆகியவற்றை திருடி அவற்றின் மூலம் நமது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைக் கொள்ளையடிக்கிறார்கள். மேற்கூறிய மூன்றும் கிடைக்கும் பட்சத்தில், நமது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க, OTP கூட தேவையில்லை என்பது தான் அதிர்ச்சிகரமான விஷயம். ஆதார் எண்ணைப் பற்றித் சொல்லத் தேவையில்லை, மூலை முடுக்குகளில் உள்ள கடைகளில் எல்லாம் கொடுத்து வைத்திருப்போம். நமது கைரேகையை, பதிவு அலுவலகங்களிலிருந்து திருடுகிறார்கள். நமது வங்கிக் கணக்கு தகவல்களை நமக்கே தெரியாமல் குறுக்கு வழிகளில் சேகரித்து வைத்துக் கொள்கிறார்கள். இத்தனையையும் பெற்ற பிறகு, நமது வங்கிக் கணக்கில் இருந்து நாமே அறியாமல் பணத்தை எடுப்பது சுலபமாகி விடுகிறது.
இதனை தடுப்பது மற்றும் பாதுகாப்பாக இருப்பது எப்படி?
இது போன்ற மோசடிகளில் ஒன்று, நமது மொபைல் எண்ணுக்கு வரும் OTP அல்லது நமது கைரேகை ஆகியவற்றுள் ஏதாவது ஒன்று வேண்டும். OTP-யை நம்முடைய மொபைலை தவிர வேறு இடங்களில் பெற முடியாது. ஒரு வேளை நம்முடைய சிம் கார்டு திருடப்பட்டாலும் அதனை லாக் செய்ய முடியும். கைரேகையையும் அதேபோல் நாம் லாக் செய்து விட்டால், நம்முடைய கைரேகை மற்றும் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி திருட்டுச் செயல்களில் ஈடுபட முடியாது. மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஆதார் செயலி மற்றும் ஆதார் இணையதளம் மூலம் நம்முடைய கைரேகையைப் பயன்படுத்த முடியாமல் லாக் செய்யும் வசதி அளிக்கப்பட்டிருக்கிறது.
கைரேகையை லாக் செய்வது எப்படி?
முதலில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 'mAadhaar' செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின்னர், நம்முடைய ஆதார் எண், மொபைல் எண், OTP ஆகியவற்றைக் கொடுத்து, அதில் நம்முடைய ஆதார் எண்ணுக்கான கணக்கை உருவாக்கிக் கொள்ளுங்கள். பின்னர், அந்தச் செயலியில் உள்நுழைந்தால், 'மை ஆதார்' என பகுதியின் கீழே 'பயோமெட்ரிக் லாக்' என்ற தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும். அதனை கிளிக் செய்து, நமது மொபைல் எண்ணுக்கு வரும் OTP-யை அளித்து நம்முடை கைரேகை உட்பட அனைத்து பயோமெட்ரிக்குகளையும் லாக் செய்து வைத்துக் கொள்ளலாம். நமது கைரேகையை ஆதாருடன் நாம் பயன்படுத்த வேண்டிய தேவை எழும்போது மட்டும், மேற்கூறிய அதே நடவடிக்கையை பின்பற்ற அன்லாக் செய்து கொண்டு, பின்னர் மீண்டும் லாக் செய்து கொள்ளலாம்.