வாட்ஸ்அப்பில் வரும் இந்த ஃபைலை மட்டும் டவுன்லோட் பண்ணாதீங்க! 8வது ஊதியக் குழுவின் பெயரில் சைபர் கிரைம் மோசடி
செய்தி முன்னோட்டம்
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C), அரசு ஊழியர்களுக்கு ஒரு மிக முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. 8வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்ட பிறகு, திருத்தப்பட்ட சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தைக் கணக்கிட உதவுவதாகக் கூறி, வாட்ஸ்அப்பில் மர்ம நபர்கள் ஒரு புதிய மோசடியைத் தொடங்கியுள்ளனர். 'சைபர் தோஸ்த்' என்ற முன்னெடுப்பின் கீழ் இந்த எச்சரிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
திருட்டு
APK ஃபைல் மூலம் நடக்கும் திருட்டு
மோசடிக்காரர்கள் வாட்ஸ்அப் மூலம் ஒரு மெசேஜ் அனுப்புகிறார்கள். அதில், உங்கள் புதிய சம்பளத்தை அறிந்துகொள்ள ஒரு செயலியை (APK File) பதிவிறக்கம் செய்யுமாறு கூறப்பட்டிருக்கும். நீங்கள் அந்த APK ஃபைலை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்தவுடன், ஹேக்கர்கள் உங்கள் மொபைலின் முழுக் கட்டுப்பாட்டையும் பெற்றுவிடுவார்கள். இதன் மூலம் உங்கள் வங்கிக் கணக்கு விபரங்கள், ஓடிபி மற்றும் தனிப்பட்ட தகவல்களைத் திருடி, சில நிமிடங்களிலேயே உங்கள் வங்கிப் பணத்தை அவர்கள் அபகரித்து விடுவார்கள்.
பாதுகாப்பு
I4C விடுத்துள்ள பாதுகாப்பு ஆலோசனைகள்
அரசு ஊழியர்கள் பாதுகாப்பாக இருக்க கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய செய்திகள்: சம்பள உயர்வு தொடர்பாக வாட்ஸ்அப், மின்னஞ்சல் அல்லது தொலைபேசி அழைப்புகள் மூலம் வரும் தகவல்களைத் தவிர்க்கவும். அதிகாரப்பூர்வ தளம்: 8வது ஊதியக் குழு தொடர்பான தகவல்களுக்கு https://8cpc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டுமே அணுகவும். APK கோப்புகள்: அரசு ஒருபோதும் .APK கோப்புகளை வாட்ஸ்அப் வழியாக அனுப்பாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். தெரியாத நபர்களிடமிருந்து வரும் ஃபைல்களைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். போன் செட்டிங்ஸ்: உங்கள் ஆண்ட்ராய்டு போனில் "Unknown Sources" மூலம் செயலிகளை இன்ஸ்டால் செய்யும் வசதியை முடக்கி வைக்கவும்.
விளக்கம்
APK ஃபைல் என்றால் என்ன?
APK (Android Package Kit) என்பது ஆண்ட்ராய்டு போன்களில் செயலிகளை நிறுவுவதற்குப் பயன்படும் ஒரு கோப்பு முறையாகும். பொதுவாக நாம் கூகுள் பிளே ஸ்டோர் மூலம் செயலிகளைப் பதிவிறக்கம் செய்வோம். ஆனால், இந்த APK கோப்புகள் நேரடியாகத் தரவிறக்கம் செய்யப்பட்டு இன்ஸ்டால் செய்யப்படுபவை. இவற்றில் வைரஸ் அல்லது மால்வேர் ஒளிந்திருக்க அதிக வாய்ப்புள்ளதால், இவை மிகவும் ஆபத்தானவை. உங்கள் மொபைல் பாதுகாப்பாக இருக்க, எப்போதும் அங்கீகரிக்கப்பட்ட செயலிகளை மட்டுமே பயன்படுத்தவும். சைபர் புகார்களுக்கு 1930 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.