2024ல் வெளியாகவிருக்கும் புதிய ஆப்பிள் சாதனங்கள்
இந்த 2023ம் ஆண்டில் பிற தொழில்நுட்ப நிறுவனங்களை விட சற்று அதிகமாகவே புதிய கேட்ஜட்களை அறிமுகப்படுத்தியது ஆப்பிள். முக்கியமாக தங்களது புதிய விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்கள் குறித்த அறிமுகத்தை இந்த ஆண்டு தான் கொடுத்தது அந்நிறுவனம். இதனைத் தொடர்ந்து 2024ம் ஆண்டில் வெளியாகவிருக்கும் புதிய கேட்ஜட்கள் என்னென்ன? பார்க்கலாம். தங்களுடைய புதிய மிக்ஸூடு ரியாலிட்டி ஹெட்செட்களான விஷன் ப்ரோவை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தினாலும், அடுத்த ஆண்டு தான் அதனை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ஆப்பிள். 3,499 டாலர்கள் விலையில், அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில், முதலில் அமெரிக்காவிலும் அதனைத் தொடர்ந்து பிற நாடுகளிலும் இந்த விஷன் ப்ரோ ஹெட்செட்டை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ஆப்பிள்.
2024-ல் ஆப்பிளின் திட்டம்:
2023-ல் தங்களுடைய ஐபேடு லைன்அப்பில் ஆப்பிள் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை. எனவே, 2024-ல் OLED திரை மற்றும் புதிய M3 சிப்புடன் கூடிய புதிய ஐபேடுகளை அந்நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2023-ல் புதிய M3 சிப்பைக் கொண்டு மேக்புக் ப்ரோ மாடல்களை வெளியிட்டிருந்தது அந்நிறுவனம். இதனைத் தொடர்ந்து, 2024-ல், M3 சிப்பைக் கொண்ட மேக்புக் ஏர் மாடல்களின் வெளியீடு எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிளின் பிரதான சாதனமான ஐபோன்களில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான 15 சீரிஸூக்குப் பதிலாக, புதிய 16 சீரிஸ் ஐபோன்களை ஆப்பிள் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது. புதிய ஐபோன் 16 சீரிஸூடன், யுஎஸ்பி-சி டைப் கனெக்டர் வசதி கொண்ட ஏர்பாட்ஸ் மேக்ஸ் மாடலையும், 2024ல் ஆப்பிளிடம் நாம் எதிர்பார்க்கலாம்.