ரூ.1.30 கோடிக்கு ஏலம் போன ஆப்பிளின் முதல் ஐபோன் மாடல்
செய்தி முன்னோட்டம்
பழைய ஆப்பிள் சாதனங்கள் அல்லது பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஆப்பிள் சாதனங்கள் அவ்வப்போது ஏல நிறுவனங்களால் ஏலம் விடப்படும். புதிய ஆப்பிள் சாதனங்களை மட்டுமல்லாது, இந்த பழைய ஆப்பிள் சாதனங்களையும் வாங்குவதற்கு ஆப்பிள் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவார்கள்.
இதற்கு முன்னர் பழைய மாடல் ஐபோன் ஒன்றை ஏலத்தில் இந்திய மதிப்பில் ரூ.52 லட்சத்திற்கு ஒருவர் வாங்கியதே அதிக பட்ச தொகைக்கு வாங்கப்பட்ட பழைய மாடல் ஐபோனாக இருந்தது.
தற்போது அதனை விட கூடுதலான தொகையாக, முதன் முதலில் வெளியான ஐபோன் மாடல் ஒன்று இந்திய மதிப்பில் ரூ.1.30 கோடிக்கு LCG ஏலத்தில் ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறது.
ஆப்பிள்
என்ன சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது ஏலம் எடுக்கப்பட்ட ஐபோன்:
2007-ம் ஆண்டில் தான் தங்களது முதல் ஐபோனை வெளியிட்டது ஆப்பிள் நிறுவனம். அப்போது 4GB மற்றும் 8GB என இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுடன் முதல் ஐபோனை வெளியிட்டது ஆப்பிள்.
அப்போது வெளியான 4GB ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ஒன்று தான் தற்போது ரூ.1.30 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது.
ஏலம் எடுக்கப்பட்ட ஐபோனின் அட்டைப் பெட்டியில் நிறுவனத்தின் சீல் கூட பிரிக்கப்படாத நிலையில் முற்றிலும் புதிதாக இருப்பதாக தங்கள் தளத்தில் குறிப்பிட்டிருக்கிறது ஏல நிறுவனம்.
மேலும், அப்போது 8GB வேரியன்டே அதிகமாக விற்பனையானதைத் தொடர்ந்து, இரண்டே மாதங்களில் 4GB ஸ்டோரேஜ் வேரியன்டின் உற்பத்தியை நிறுத்தியது ஆப்பிள்.
எனவே, இந்த 4GB மாடலானது கிடைப்பதற்கு அரிய மாடல் எனக் குறிப்பிட்டிருக்கிறது அந்த ஏல நிறுவனம்.