15,000 பேர், 700 கோடி ரூபாய்.. பெரிய அளவில் நடத்தப்பட்டிருக்கும் ஆன்லைன் மோசடி
சீனாவைச் சேர்ந்த மோசடி நபர்கள் இந்தியாவில் பல்வேறு நபர்களிடம் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு ரூ.700 கோடிக்கும் மேல் கொள்ளையடித்திருப்பதாக ஹைதராபாத் போலீசார் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த ஆன்லைன் மோசடி தொடர்பாக இந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்களில் ஒன்பதுக்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள், மேலும் 6 பேரை தேடி வருகின்றனர் காவல்துறையினர். பாமர மக்கள் மட்டுமின்றி, தொழில்நுட்பம் மற்றும் ஆன்லைன் மோசடிகளை பற்றி பரீட்சையமான மென்பொருள் பொறியாளர்கள் கூட ரூ.82 லட்சம் வரை இந்த ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனைத்து ஆவணங்களையும் அனுப்பியிருப்பதாக ஹைதராபாத் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். இந்த மோசடியில் சுமார் 15,000 நபர்கள் வரை பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்திருக்கின்றனர்.
என்ன வகையான ஆன்லைன் மோசடி?
வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகள் மூலம், யூடியூபில் லைக்ஸ் இடுவது, கூகுளில் ரிவ்யூ பதிவிடுவது உள்ளிட்ட சிறிய வேலைகளைச் செய்வதன் மூலம் வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி தொடங்குகிறது இந்த மோசடி. முதலில் ரூ.1000, பின்னர் ரூ.5,000, அதன்பின்னர் ரூ.10,000 என பயனாளர்கள் முதலீடு செய்யும் அளவை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி பல லட்சங்கள் வரை பாதிக்கப்பட்டவர்களிடம் ஆசை வார்த்தை கூறி பணத்தைக் கொள்ளையடிக்கின்றனர். தாங்கள் மோசடி நபர்களுக்கு அனுப்பும் பணம் தங்களுக்குத் திரும்பக் கிடைக்காது என பாதிக்கப்பட்டவர்கள் உணர்வதற்குள் ஆயிரங்களில் தொடங்கி பல லட்சம் ரூபாயை மோசடி நபர்களுக்கு அனுப்பியிருக்கிறார்கள். இந்த மோசடியில் 113 இந்திய வங்கிக் கணக்குகள் மற்றும் என்னற்ற இந்திய சிம் கார்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.