புற்றுநோய் சிகிச்சைக்கு இனி பயப்பட வேண்டாம்; லட்சக்கணக்கான ரூபாய் மிச்சம்; சைடஸ் நிறுவனத்தின் புதிய அறிமுகம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனமான சைடஸ் லைஃப்சயின்சஸ் (Zydus Lifesciences), புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் நிவோலுமாப் (Nivolumab) மருந்தின் பயோசிமிலர் (Biosimilar) பதிப்பான திஷ்தா (Tishtha) என்ற மருந்தை அறிமுகம் செய்துள்ளது. இது அசல் மருந்தின் விலையை விட சுமார் நான்கு மடங்கு குறைவான விலையில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் தலைப்பகுதி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு இது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.
விலை
விலையில் மிகப்பெரிய மாற்றம்
அமெரிக்காவின் பிரிஸ்டல் மியர்ஸ் ஸ்குவிப் (Bristol Myers Squibb) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட நிவோலுமாப் மருந்து, உலக அளவில் அதிகம் விற்பனையாகும் முதல் 10 மருந்துகளில் ஒன்றாகும். தற்போது சைடஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள திஷ்தா மருந்தின் விலை விவரங்கள்: 100 மி.கி (100 mg): ரூ. 28,950 40 மி.கி (40 mg): ரூ. 13,950 அசல் மருந்தின் விலையுடன் ஒப்பிடுகையில், இது நோயாளிகளின் நிதிச் சுமையை 75 சதவீதம் வரை குறைக்கும். இதன் மூலம் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் உயர்தர இம்யூனோதெரபி (Immunotherapy) சிகிச்சையைப் பெற முடியும்.
முக்கியத்துவம்
ஏன் இந்த மருந்து முக்கியமானது?
நிவோலுமாப் என்பது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டி, புற்றுநோய் செல்களைக் கண்டறிந்து அழிக்க உதவும் ஒரு புரதத் தடுப்பு (Checkpoint Inhibitor) மருந்தாகும். புற்றுநோய் சிகிச்சையில் பல சுற்றுகள் (Cycles) மருந்து எடுத்துக்கொள்ள வேண்டியிருப்பதால், அதன் விலை மிக முக்கிய காரணியாக உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த மருந்து, தடையற்ற விநியோகத்தையும், நீண்ட கால சிகிச்சைக்கான மலிவான தேர்வையும் உறுதி செய்கிறது.
இந்தியா
இந்தியாவின் புற்றுநோய் பாதிப்பு
ஐசிஎம்ஆர் தரவுகளின்படி, இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 15 லட்சம் பேர் புற்றுநோயால் புதிதாகப் பாதிக்கப்படுகின்றனர். மார்பகப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் மற்றும் வாய் புற்றுநோய் ஆகியவை இந்தியாவில் மிகவும் பொதுவாகக் காணப்படுகின்றன. ஒரு இந்தியர் தனது வாழ்நாளில் புற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு 11 சதவீதமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய சூழலில், சைடஸ் நிறுவனத்தின் இந்த மலிவு விலை மருந்து பல உயிர்களைக் காக்க உதவும்.