கண்களுக்குத் தெரியாமல் செய்யும் இந்த தவறுகள் பார்வையைப் பறிக்கக்கூடும்
செய்தி முன்னோட்டம்
உலகப் பார்வை தினத்தை முன்னிட்டு, அன்றாட வாழ்க்கையில் நமது அறியாமையால் நாம் செய்யும் சில தவறுகள் பார்வையை எவ்வாறு பாதிக்கின்றன என்பது குறித்தும், அவற்றைத் தவிர்க்க நிபுணர்கள் வழங்கும் முக்கியக் ஆலோசனைகள் குறித்தும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதை கவனத்தில் கொண்டு வாழ்க்கை முறையை மாற்றுவதால், கண்பார்வை குறைபாட்டை கட்டுப்படுத்தலாம். ஸ்மார்ட்போன் மற்றும் கணினித் திரைகளைத் தொடர்ந்து பார்க்கும்போது கண்கள் சிமிட்டுவது குறைகிறது. இதனால் கண்கள் வறட்சியடைந்து எரிச்சல் ஏற்படுகிறது. எனவே இடைவெளி எடுத்துத் தொலைதூரத்தில் உள்ள பொருட்களைப் பார்க்க வேண்டும். மேலும், சிறுவர்கள் எப்போதும் வீட்டிற்குள்ளேயே படிக்காமல், தினமும் வெளியில் சென்று விளையாடுவது அவர்களின் தொலைதூரப் பார்வையை மேம்படுத்த மிகவும் அவசியமாகும்.
சொட்டு மருந்து
கான்டாக்ட் லென்ஸ் மற்றும் சொட்டு மருந்துப் பயன்பாடு
கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் முறையான சுகாதாரத்தை பேண வேண்டும்.
எரிச்சல் ஏற்பட்டால் உடனடியாக லென்ஸை கழற்றிவிட்டு கண்ணாடிக்கு மாற வேண்டும்.
அதேபோல், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே கண் சொட்டு மருந்தை பகிர்ந்து பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இது கிருமித் தொற்றை உண்டாக்கும்.
நாற்பது வயதைக் கடந்த பின் புத்தகங்களையோ ஸ்மார்ட்போனையோ தள்ளி வைத்துப் படித்தல், நிறங்களை அடையாளம் காண்பதில் மாற்றம், இரவு நேரத்தில் காரின் முகப்பு விளக்குகளைப் பார்க்கும்போது ஏற்படும் அசௌகரியம் ஆகியவை கண்புரை மற்றும் பார்வை மாற்றத்தின் தொடக்கப் புள்ளியாகும்.
எனவே பார்வையில் சிறு மாற்றம் தெரிந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்துகொள்வது அவசியமாகும்.