இன்று போலியோ தினம் அனுசரிப்பு - முக்கியத்துவங்கள் மற்றும் அவசியங்கள் என்னென்ன ?
இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 24ம் தேதி உலக போலியோ தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய தினம் போலியோ சொட்டு மருந்தின் முக்கியத்துவங்கள் குறித்து பல விழிப்புணர்வுகள் மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். போலியோ என கூறப்படும் இந்த இளம்பிள்ளை வாத நோய்க்கான தடுப்பூசி முதன்முதலாக 1955ல் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அந்த ஊசி பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தியதோடு, கடும் காய்ச்சலும் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இதற்கு மாற்று மருந்தினை கண்டறியவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
வாய்வழியான போலியோ சொட்டு மருந்து
அதன்படி ஆல்பர்ட் ப்ரூஸ் சாபின் என்பவர் போலியோ நோய்க்கான வாய்வழி கொடுக்கப்படும் சொட்டு மருந்தினை கண்டறிந்துள்ளார். இதனை தொடர்ந்து உலகம் முழுவதும் இந்த போலியோ நோயினை ஒழிக்கும் பணி உலக சுகாதார சபை கொண்டு 1988ம் ஆண்டு துவங்கப்பட்டது. அதன் பின்னரே 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ளும் முக்கியத்துவம் அனைவர் மத்தியிலும் வலியுறுத்தப்பட்டது. அந்த முயற்சிகளில் ஒன்று தான் இந்த 'உலக போலியோ தினம்'. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தான் இந்த போலியோ நோயால் அதிகம் பாதிப்படைய வாய்ப்புள்ளது.
முதுகு தண்டினை பாதிக்கும் போலியோ
முதுகு தண்டின் நரம்புகளை இந்த போலியோ வைரஸ் பாதிக்கக்கூடும் என்பதால் பக்கவாதம் மற்றும் இறப்புகள் நேர அதிக வாய்ப்புள்ளது. மேலும் இந்த தொற்றானது ஒருவரிடமிருந்து மற்றவர்களிடம் எளிதில் பரவக்கூடியதாம். காய்ச்சல், தொண்டைவலி, வயிற்று வலி, சோர்வு, கழுத்து மற்றும் முதுகு வலி, கால்-கைகளை நகர்த்துவதில் ஏற்படும் சிக்கல், வாந்தி உள்ளிட்ட உபாதைகள் போலியோவின் அறிகுறி என்று கூறுகிறார்கள். இது போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக மருத்துவர்களை அணுகவேண்டும்.
சுத்தம் சுகாதாரம் அவசியம்
சுத்தம் இல்லாமல் சுகாதாரமற்ற உணவுகள் மற்றும் குடிநீரை உட்கொள்ளும் காரணத்தினால் தான் இந்த போலியோ வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த நோய் தொற்றுகளில் இருந்து தப்பிக்க ஒரே வழி தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்துகள் தான் என்பதால் இந்தியா முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் அரசு சார்பில் தொடர்ந்து போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
போலியோ இல்லாத நாடாக இந்தியா திகழ்கிறது
இது போன்று அரசே முன்வந்து ஒவ்வொரு ஆண்டும் போலியோ சொட்டு மருந்தினை மக்களை தேடி சென்று அளித்தும், பல முகாம்கள் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி மருந்தளித்து வருவதாலும், தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதன் காரணமாகவும் கடந்த 2014ம் ஆண்டு முதல் போலியோ இல்லாத நாடாக இந்தியா திகழ்கிறது. இதே போல் பல்வேறு நாடுகளிலும் போலியோ ஒழிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் போலியோ நோயானது உலகளவில் அழிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.