சும்மா நடந்தா மட்டும் பத்தாது! நடக்கும்போது இந்த தப்பு பண்றீங்களா? ஆரோக்கியமான நடைபயிற்சிக்கு இதோ சில டிப்ஸ்!
செய்தி முன்னோட்டம்
நடைபயிற்சி என்றாலே ஒரு நாளில் எத்தனை ஆயிரம் காலடிகள் நடக்கிறோம் என்பதில் தான் பலரும் கவனம் செலுத்துகின்றனர். ஆனால், எத்தனை தூரம் நடக்கிறோம் என்பதை விட, எவ்வளவு தரமாக நடக்கிறோம் என்பதே முக்கியம் என்று பிரபல வாழ்க்கைமுறை பயிற்சியாளர் லூக் கூட்டின்ஹோ விளக்குகிறார். வெறும் எண்ணிக்கையை மட்டும் இலக்காகக் கொள்ளாமல், சரியான உடல் அமைப்போடு நடப்பதுதான் முழுமையான பலனைத் தரும் என்பது அவரது கருத்தாகும்.
நடைமுறை
சரியான நடக்கும் முறை
நடக்கும்போது உங்கள் உடல் அமைப்பு சரியாக இருக்க வேண்டும். கூன் விழுந்தவாறு அல்லது தரையைப் பார்த்தபடி நடக்காமல், முதுகை நேராக வைத்து, தோள்களைத் தளர்வாக விட்டு, நேராகப் பார்த்து நடக்க வேண்டும். கைகளை இயல்பாக முன்னும் பின்னும் வீசி நடப்பது உடலின் சமநிலையைப் பராமரிக்க உதவும். தவறான முறையில் நடப்பது முதுகு வலி, முழங்கால் வலி மற்றும் தசைப் பிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்று அவர் எச்சரிக்கிறார். நடைபயிற்சியின் போது மூச்சு விடுவதில் கவனம் செலுத்த வேண்டும். ஆழ்ந்த மற்றும் சீரான சுவாசம் உடலுக்குத் தேவையான ஆக்சிஜனை வழங்கும்.
மனம்
மனதைக் கவனித்து நடத்தல்
அதேபோல், தரையில் கால்களை வைக்கும்போது முதலில் குதிகால் பதிய வேண்டும், அதன் பிறகு மெதுவாகப் பாதத்தின் முன்பகுதிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இது பாதங்களுக்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைத்து, நடையை மென்மையாக்கும். நடக்கும்போது செல்போன் பயன்படுத்துவதையோ அல்லது வேறு சிந்தனைகளில் இருப்பதையோ தவிர்த்து, அந்தச் செயலில் முழு கவனம் செலுத்த வேண்டும். மைண்ட்ஃபுல் வாக்கிங் (Mindful Walking) எனப்படும் இந்த முறை, மன அழுத்தத்தைக் குறைப்பதோடு உடலுக்கும் மனதிற்கும் இடையிலான இணைப்பை வலுப்படுத்தும். வெறும் 10,000 ஸ்டெப்ஸ் நடப்பதை விட, 20 நிமிடங்கள் சரியான நுட்பத்துடன் நடப்பது அதிக ஆரோக்கியத்தைத் தரும் என லூக் கூட்டின்ஹோ பரிந்துரைக்கிறார்.