சமையல் குறிப்பு: வீகன் முட்டை பொடிமாஸ் செய்வது எப்படி?
இன்னும் ஓரிரு நாட்களுக்குள் புரட்டாசி மாதம் முடியவுள்ளது. இந்த புரட்டாசி மாதத்தில் பலரும் அசைவ உணவை துறந்து விரதம் இருப்பார்கள். அறிவியல் ஆராய்ச்சிப்படி, பருவநிலை மாற்றங்கள் இருக்கும் இந்த மாதத்தில், அசைவ உணவு உண்பதால், உடலில் உஷ்ணம் அதிகரிக்கும். அது பலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அதை தவிர்க்கவே, அசைவ உணவுகளை இந்த மாதம் முழுவதும் சாப்பிடக்கூடாது என முன்னோர்கள் கூறியிருந்தனர். எனினும், தற்போதுள்ள இளம் தலைமுறையினருக்கு இது போன்ற உணவு கட்டுப்பாடுகள் கடைபிடிப்பது சிரமமாக தோன்றும். அவர்களுக்காகவே இந்த மாதம் முழுவதும், வித்தியாசமான உணவு ரெசிபிக்களை நாங்கள் வழங்கி வருகிறோம். இன்று, முட்டை இன்றி, முட்டை பொடிமாஸ் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தோசைக்கு: கடலை மாவு - 1 கப் மிளகாய் தூள் - ½ தேக்கரண்டி கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன் மிளகு தூள் - ½ தேக்கரண்டி கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன் ருசிக்க உப்பு எண்ணெய் - 1 டீஸ்பூன்
தேவையான பொருட்கள்
மசாலாவிற்கு: எண்ணெய் - 4 டீஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் சோம்பு - 1 தேக்கரண்டி வெங்காயம் - 1 பொடியாக நறுக்கவும் பச்சை மிளகாய் - 1 பொடியாக நறுக்கியது இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - ½ தேக்கரண்டி கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன் மிளகு தூள் - ½ தேக்கரண்டி கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன் ருசிக்க உப்பு
செய்முறை
தோசைக்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் கலக்கவும். தோசை மாவு போல், தண்ணீரை சேர்க்க வேண்டும். திக்-ஆக இருக்கக்கூடாது. அடுத்து, ஒரு தோசை கல்லை சூடாக்கி, தோசையை ஊற்றவும். தோசையின் இரு பக்கங்களும் நன்கு வேகும் வரை, 4 முதல் 5 நிமிடங்கள் வரை சமைக்கவும். சுட்ட தோசையை எடுத்து, பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்னர், ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெயை விட்டு, பெருஞ்சீரகம் மற்றும் கடுகு சேர்த்து தாளிக்கவும்.
செய்முறை
அதனுடன், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். இப்போது, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பச்சை வாசனை போனதும், அனைத்து மசாலா பொடிகள் மற்றும் உப்பு சேர்த்து, நன்றாக கலக்கவும். இப்போது வெட்டி வைத்துள்ள தோசை துண்டுகளை, இந்த மசாலா கலவையில் போடவும். மீதமுள்ள 2 டீஸ்பூன் எண்ணெயை விட்டு, 5 முதல் 10 நிமிடங்கள் வரை, குறைந்த அனலில் வறுக்கவும். அவ்வளவு தான், சூப்பரான வெஜ் முட்டை பொடிமாஸ் தயார்!