உலக அமைதி மற்றும் புரிதல் நாள்: அதன் வரலாற்றையும், முக்கியத்துவத்தை பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
ஆண்டுதோறும், உலக அமைதி மற்றும் புரிதல் தினம், பிப்ரவரி 23 அன்று கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த நாளில் தான், உலக அமைதியை வலியுறுத்தும் இன்டர்நேஷனல் ரோட்டரி கிளப்பும் உருவாக்கப்பட்டது. எனவே, ரோட்டரி இன்டர்நேஷனல், இந்த நாளை ஊக்குவிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உருவாக்கப்பட்ட ரோட்டரி இன்டர்நேஷனல் அமைப்பு, சர்வதேச உறவுகள், நாடுகளுக்கிடையே அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த உலக அமைதி மற்றும் புரிதல் தினத்திற்கான வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்: இல்லினாய்ஸை சேர்ந்த வழக்கறிஞர் பால் ஹாரிஸ் என்பவர், பிப்ரவரி 23, 1905 அன்று, தனது மூன்று நண்பர்களுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தார். அப்போதுதான், ரோட்டரி கிளப்பின் யோசனை முதல் முறையாக உருவானது.
உலக புரிதல் மற்றும் அமைதி தினத்தின் முக்கியத்துவம்
Gustavus Loehr, Silvestor Schiele மற்றும் Hiram Shorey ஆகியோருடன் சேர்ந்து, ஹாரிஸ், அந்த அமைப்பை உருவாக்கினார். அவர்கள் சந்திக்கும் இடங்கள் 'Rotate', அதாவது மாறிக்கொண்டே இருப்பதால், அமைப்புக்கு ரோட்டரி கிளப் என்று பெயரிட்டனர். இந்த நண்பர்கள், உலகளவில், சக வல்லுநர்களை இந்த அமைப்பின் மூலம் இணைத்தபின், 1922-ஆம் ஆண்டில் 'ரோட்டரி இன்டர்நேஷனல்' என்ற பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்றிக்கொண்டனர். அமைதியான, இணக்கமான உலகை உருவாக்குவதில், உலகளாவிய ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்துவதற்காகவே, இந்த உலக அமைதி மற்றும் புரிதல் தினம் நினைவுகூரப்படுகிறது. இந்த நாளில் இரக்கம், சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பரப்புவதற்கு, உலகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு மக்களும் ஒன்று கூடுகிறார்கள். அதற்கு ரோட்டரி ஆவண செய்கிறது.