ஹோலி கொண்டாட்டம்: குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருங்கள்
ஹோலி பண்டிகை நெருங்கிவிட்டது, பலரும் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். வண்ணங்களின் திருவிழாவுக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள், குறிப்பாக குழந்தைகள். ஹோலி தண்ணீரில் நனைவதற்கு அனைவரும் தயாராகும் அதே வேளையில், பண்டிகைக் கொண்டாட்டத்தில் இருந்து திடீர் விபத்துக்களைத் தவிர்க்க, நம் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதும் முக்கியம். இந்த ஹோலியில் குழந்தைகள் பாதுகாப்பாக விளையாடுவதற்கான சில பாதுகாப்பு குறிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் இதோ உங்கள் பார்வைக்கு வழங்கப்படுகிறது. வண்ணங்கள்: பாதுகாப்பான மற்றும் சூழல் நட்பு வண்ணங்களைப் பயன்படுத்தவும். செயற்கை வண்ணங்களில் ஈயம், பாதரசம் மற்றும் அலுமினியம் புரோமைடு போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன. அவை உங்கள் குழந்தையின் சருமத்தை சேதப்படுத்தும் . உங்கள் குழந்தைகளுக்கு எளிதில் கழுவக்கூடிய பாதுகாப்பான மூலிகை வண்ணங்களை வாங்கவும்.
சில பாதுகாப்பு குறிப்புகள்
தண்ணீர் பலூன்களை தவிர்ப்பீர்: தண்ணீர் பலூன்களைத் தவிர்த்து, பிச்காரிகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துங்கள். வண்ணம் அல்லது தண்ணீருடன் விளையாடும் போது உங்கள் குழந்தைகள் மீது உங்கள் பார்வை இருக்கட்டும். தண்ணீர் பலூன்கள் விளையாடுவது வேடிக்கையாக இருக்கும். ஆனால் அவை பாதுகாப்பானது இல்லை. ஆடைகள்: குழந்தைகள் முழுக் கை ஆடைகள் அணிந்து, முடிந்தவரை சருமத்தை வெளிப்படுத்தாமல் அணிவதை உறுதி செய்யுங்கள். அதனால் சருமம் பாதுகாக்கப்படும். சரும பராமரிப்பு: உங்கள் பிள்ளை ஹோலி விளையாடச் செல்வதற்கு முன், தேங்காய் எண்ணெய், ஆலிவ் அல்லது கடுகு எண்ணெயை அவரது உடல் முழுவதும் தடவவும். எண்ணெய், நிறங்கள் உங்கள் உடலில் ஒட்டாமல், ஒரு பாதுகாப்பு அடுக்காக செயல்படும். அல்லது மாய்ஸ்சரைசிங் க்ரீமையும் தடவலாம்.