நீண்ட நாட்களுக்கு கீரைகளை ஃபிரிட்ஜில் வைக்க உங்களுக்கான டிப்ஸ்..!
பச்சைகாய்கறிகளை உண்பதால், பலவித ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் என்பது உண்மை. அதிலும், கீரைகள், மல்லி, புதினா, கறிவேப்பிலை போன்ற பச்சை இலைகளில் இருக்கும் நன்மைகள் வேறு எந்த உணவிலும் கிடைக்காது. ஆனால், கீரை வகைகள் மழைக்காலங்களில் கடையில் வாங்க கூடாது என பலர் கூற கேட்டிருப்பீர்கள். ஆனால், கடைகளில் முன்னரே வாங்கி ஃபிரிட்ஜில் வைத்திருந்தால் நீண்ட நாள் கெட்டு போகாமல் இருக்குமா என்ற ஐயம் உங்களில் பலருக்கும் இருக்கலாம். உங்களுக்காகவே, கீரை, மல்லி, புதினா போன்ற இலைகளை எப்படி நீண்ட நாள் பாதுகாத்து வைக்கலாம் என சில குறிப்புகளை இதோ தருகிறோம்!
கீரைகளை நீண்ட நாட்கள் பிரெஷாக வைப்பது எப்படி?
டவல் கொண்டு மூடி வைக்கவும்: கீரை, மல்லி, புதினா போன்றவற்றை சுத்தப்படுத்தி, ஈரமில்லாமல், ஒரு மெல்லிய துண்டில் சுற்றி, ஃபிரிட்ஜில் வைக்கலாம். இறுக்கமாக சுற்ற வேண்டாம். பேப்பர் பயன்படுத்தலாம்: கீரையை சுத்தம் செய்து, நறுக்கி, பேப்பரில் சுற்றி வைக்கலாம். அதேபோல மல்லி, புதினா தழைகளின் வேர்களை நீக்கி, பேப்பரில் சுற்றி வைக்கலாம். ஏர் டைட் பாக்ஸ்-இல் வைக்கலாம்: இந்த மாதிரி பாக்ஸ்-இல் வைப்பதாக இருந்தால், ஒரு மெல்லிய துணி, பேப்பர் அடியில் போட்டு, சுத்தப்படுத்திய இலைகளை சேமித்து வைக்கலாம். ஒரு வாரம் ஆனாலும் கெடாது. பழங்களின் அருகில் வைக்கக்கூடாது: பழங்கள் பொதுவாக எத்திலின் வாயுக்களை வெளியிடும். எனவே கீரையும், புதினா மல்லி இலைகளையும், அதன் அருகில் வைத்தால், எளிதில் கெட்டுப்போகக்கூடும்.