தீபாவளியை பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாட சில குறிப்புகள்
இனிப்புகளை ருசிப்பதற்கும், புத்தாடைகளை உடுத்துவதற்குமான நாளாக தீபாவளி இருந்தாலும், பட்டாசுகளுடனும் தீபாவளி பண்டிகை நீண்ட தொடர்பு கொண்டுள்ளது. நாம் பட்டாசுகளுடன் தீபாவளியை கொண்டாடும் பாரம்பரியத்தை தொடர்ந்தாலும், அவற்றை கையாளும்போது நாம் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகிறது. தீபாவளி சமயங்களில் ஏற்படும் பெரும்பான்மையான பட்டாசு விபத்துக்கள் கண்களில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கண் சார்ந்து பதிவாகும் பெரும்பான்மையான விபத்துகளுக்கு, பட்டாசுகளே காரணமாக உள்ளன. கைகள் மற்றும் கால்களுக்கு அடுத்தபடியாக, பட்டாசுகளால் பதிகம் பாதிக்கப்படக்கூடிய உறுப்பு கண் என்பது குறிப்பிடத்தக்கது. புஸ்வானம், சங்கு சக்கரம் போன்றவற்றிலிருந்து வரக்கூடிய தீப்பொறிகள் கண்களை பாதிக்கிறது. 50%க்கும் அதிகமான பார்வையாளர்களுக்கும் பட்டாசுகள், கண் காயங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கண்களில் ஏற்படும் காயங்களின் வகைகள்
கண் காயத்தின் தீவிரம் லேசான எரிச்சல் முதல் தொடங்கி, குருட்டுத்தன்மை கூட ஏற்படுத்தலாம். பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களால் இரசாயன காயங்கள் ஏற்படுகின்றன. கடுமையான புகையால் கண்களில் எரிச்சல் ஏற்பட்டு, நீர் வடியும். பட்டாசிலிருந்து வெளிப்படும் புகை, தொண்டை அழற்சி மற்றும் பிற தொண்டை நோய்த்தொற்றுகளையும் ஏற்படுத்தக்கூடும். தீப்பொறிகள் ஆபத்தானவை, ஏனெனில் அவை தங்கத்தை உருக்கும் அளவுக்கு(1,800°F) வெப்பமான வெப்பநிலையில் எரிகின்றன. தீபாவளியின் போது காற்று மாசு அதிகரிக்கிறது. நைட்ரஸ் ஆக்சைடு மற்றும் சல்பர் டை ஆக்சைடு அளவு கணிசமாக அதிகரிக்கிறது. மேலும், ஒலிமாசு அளவு அனுமதிக்கப்பட்ட அளவைக் கடக்கிறது. கான்டாக்ட் லென்ஸ்கள் நீண்ட நேரம் நேரடி வெப்பத்தில் இருந்தால் கண்களில் எரிச்சல் ஏற்படலாம். அவற்றை பயன்படுத்துபவர்கள் பட்டாசுகளை வெடிக்கும்போது எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.
பட்டாசு வெடிக்கும் போது செய்ய வேண்டியவையும், செய்யக்கூடாதவையும்
கண்களை தேய்க்கவோ, சொரியவோ கூடாது. கண்களையும் முகத்தையும் நன்றாக கழுவ வேண்டும். கண்ணில் எரிச்சல் அல்லது வேறு துகள்கள் கண்ணில் இருந்தாலோ, கண்களை திறந்து தொடர்ந்து நீரில் கழுவவும். கண்களில் பெரிதான பொருள் ஏதாவது சிக்கிக் கொண்டால், அதை நீக்க முயற்சிக்காதீர்கள். கண்களை மூடியவாறு மருத்துவரை அணுகுங்கள். ரசாயனப் பொருள் ஏதாவது கண்களில் பட்டால், கண்களை 30 நிமிடம் தண்ணீரில் கழுவிய பின்னர், மருத்துவரை உடனடியாக அணுகவும்.
பட்டாசு வெடிக்க சில பொதுவான வழிமுறைகள்
பட்டாசுகளை திறந்த வெளியில், கண்களில் கண்ணாடி போட்டுக்கொண்டு வெடிப்பது நல்லது. பட்டாசு வெடித்து முடித்தபின் கைகளை தூய நீரில் நன்றாக கழுவ வேண்டும். குழந்தைகள், பெரியவர்கள் மேற்பார்வையில் தான் பட்டாசு வெடிக்க வேண்டும். எந்த காயத்தையும் எளிதாக எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். திடீரென தீ விபத்து ஏற்பட்டால் அணைக்க மணல் மற்றும் தண்ணீரை வைத்திருப்பது அவசியம். பட்டாசுகளை குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில், பாதுகாப்பாக வைக்க வேண்டும். வெடிக்காத பட்டாசுகளை கைகளால் எடுக்கக் கூடாது. அவற்றை தண்ணீர் ஊற்றி அணைப்பது நல்லது.
பட்டாசு வெடிக்க சில பொதுவான வழிமுறைகள்-2
பட்டாசுகளை உடலுக்கு, துணிகளுக்கு தொலைவில் வைத்து வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது சிந்தடிக் உடைகளை தவிர்ப்பது நல்லது. பட்டாசு வெடிக்கும் போது முழங்கை அளவு தூரமும், வேடிக்கை பார்க்கும் போது குறைந்தது 5 மீட்டர் தொலைவில் நிற்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் முன் காண்டாக்ட் லென்ஸை கலட்டி விட்டு செல்வது நல்லது. உங்களிடம் கண்ணாடி இருந்தால் அதை பயன்படுத்திக் கொள்ளலாம். வெடித்த வெடிகளை குப்பையில் போடும் முன், தண்ணீரில் முக்கி அது செயல் இழந்ததை உறுதி செய்யவும். வெடித்த பட்டாசுகளை மிதித்தால் காயம் அடையாத வகையில், சிறந்த காலணிகளை அணிவது நல்லது.