
தமிழ் புத்தாண்டு அன்று நீங்கள் கட்டாயமாக செய்யவேண்டியவை எவை?
செய்தி முன்னோட்டம்
உலகம் முழுதும் வாழும் தமிழர்களால் வரும் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
இந்த நாளை தமிழர்கள் அனைவரும் ஒரு புதிய வருடத்தின் தொடக்கமாக, புதிய எதிர்பார்ப்புகளுடன் மற்றும் நம்பிக்கைகளுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடி, கடவுளை வழிபடுவதும், குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருக்கவும் முக்கியமாகக் கருதப்படுகின்றது.
ஆண்டு முழுவதும் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கவும், வளம் பெருகவும் இந்த தமிழ் புத்தாண்டு அன்று செய்ய வேண்டியவை என்ன என பார்ப்போம்.
#1 செய்ய வேண்டியவை
கலாச்சார நம்பிக்கையின் படி, புத்தாண்டு அன்று நீங்கள் செய்ய வேண்டியவை
மங்களப் பொருட்கள்: மா, பலா, வாழை போன்ற முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் போன்ற மங்களப் பொருட்களை வைத்து, புத்தாண்டு அதிகாலையில் அவற்றை காண்பது புனிதமாகக் கருதப்படுகிறது.
வழிபாடு: தமிழ் புத்தாண்டு அன்று அதிகாலையில் நீராடி, கோலமிட்டு, புத்தாடை அணிந்து கோயிலுக்கு சென்று வழிபடுவது சிறப்பு. கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே வழிபாடு செய்து, சிறப்பு உணவுகளை இறைவனுக்கு படைக்கலாம்.
அறுசுவை உணவு: இந்த நாளில், இனிப்பு, கசப்பு, உப்பு, காரம், துவர்ப்பு, புளிப்பு என்ற ஆறு சுவைகளும் உள்ள உணவாக ஒரு சிறப்பு படையலை செய்ய வேண்டும். இது வாழ்க்கையின் அனைத்து உணர்வுகளையும் சமரசமாக்கும் என்பதால், அவை அனைவரது வாழ்க்கையில் நிறைவையும் வளத்தையும் கொண்டு வரும் என கருதப்படுகிறது.
#2 செய்ய வேண்டியவை
மற்றவர்களுக்கு தானம் தந்து மகிழ்ச்சியை பகிரலாம்
தானம் செய்யவும்: தமிழ் புத்தாண்டு காலம், கோடை காலம் என்பதால் தானங்கள் மிக முக்கியம். குடை தானம், செருப்பு தானம், விசிறி தானம், தண்ணீர் பந்தல் அமைத்தல் போன்றவை செய்வதால் பாவங்கள் தீர்ந்து வாழ்வு வளமாகும். வறியோருக்கு உணவு, உடை போன்றவற்றையும் தானமாக அளிக்கலாம். பகிர்ந்தளித்தல் என்பது சிறந்த குணமாகும். அதனால் இந்த ஆண்டு தொடக்கத்தை மற்றவர்களுடன் பகிர்ந்தளித்து வாழ்க்கையில் மகிழ்ச்சியை கூட்டுங்கள்.
தங்கம், வெள்ளி வாங்குதல்: தமிழ் புத்தாண்டு அன்று, நீங்கள் தங்கம் அல்லது வெள்ளி நகைகள் வாங்குவது நன்மையை உண்டாக்கும். இது உங்கள் வாழ்க்கையில் செல்வாக்கை கூட்டும்.
இவற்றையெல்லாம் செய்து உங்கள் ஆண்டை சிறப்பாக தொடங்குங்கள்!