'₹85,000 போட்டு இதை வாங்காதீங்க'; ஜொமோட்டோ தீபிந்தர் கோயலின் சாதனத்தை கடுமையாக விமர்சித்த TheLiverDoc
செய்தி முன்னோட்டம்
ஜோமோட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான தீபிந்தர் கோயல் மற்றும் எடர்னல் நிறுவனம் இணைந்து டெம்பிள் (Temple) என்ற புதிய ஹெல்த் வேரபில் (Wearable) சாதனத்தை நவம்பர் 1 முதல் முன்-பதிவு செய்ய அறிமுகப்படுத்தியுள்ளனர். தலையின் பக்கவாட்டில் ஒட்டிக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சாதனம், மூளையின் ரத்த ஓட்டம் மற்றும் உடலின் என்ட்ரோபி (Entropy) எனப்படும் வெப்ப வெளியேற்ற அமைப்பைக் கணக்கிடும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவ உலகத்தை சார்ந்த பல வல்லுநர்கள் இந்த சாதனத்தின் அறிவியல் உண்மைத்தன்மையை கடுமையாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
குற்றச்சாட்டு
TheLiverDoc மருத்துவரின் கடுமையான குற்றச்சாட்டுகளும் போலி அறிவியல் விமர்சனமும்
எக்ஸ் தளத்தில் பிரபல மருத்துவ நிபுணராகத் திகழும் டாக்டர் சிரியாக் அப்பி பிலிப்ஸ் (TheLiverDoc), தீபிந்தர் கோயலின் இந்த சாதனத்தை சுத்த ஏமாற்று வேலை எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தலையின் தோல் பகுதியில் ஒட்டப்படும் இந்த சாதனத்தால் மூளையின் உள் ரத்த ஓட்டத்தை ஒருபோதும் கணக்கிட முடியாது என்றும், இது வெறும் முகத்தின் ரத்த ஓட்டத்தை மட்டுமே அளவிடுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், போலி ஆய்வறிக்கைகள் மூலம் தவறான தரவுகளைக் காட்டி மக்களை ஏமாற்றும் வேலையை இக் குழுவினர் செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தீபிந்தர் கோயல் பதிலடி
தன் மீதான குற்றச்சாட்டுகளுக்குத் தீபிந்தர் கோயல் அளித்த 7 அம்ச பதிலடி
தன் மீதான விமர்சனங்களுக்குப் பதிலளித்த தீபிந்தர் கோயல், இந்த சாதனம் ஏமாற்று வேலையாக இருந்தால் 14 நாட்களில் நிபந்தனையற்ற முறையில் பணத்தைத் திரும்பப் பெறும் வசதியை வழங்கியிருக்க மாட்டோம் எனக் கூறியுள்ளார்.
இந்த திட்டத்திற்காக தனது சொந்தப் பணமான $20 மில்லியன் உட்பட மொத்தம் $30 மில்லியன் முதலீடு செய்துள்ளதாகவும், 20 ஆண்டுகால புகழை சில ரூபாய்களுக்காக பணயம் வைக்க மாட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த சாதனம் எந்தவித மருத்துவ ஒப்புதலும் தேவைப்படாத ஒரு சாதாரண ஃபிட்னஸ் டிராக்கர் மட்டுமே என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஃபிட்னஸ் டிராக்கர்
ஃபிட்னஸ் டிராக்கர் வாதமும் முற்றிவரும் மருத்துவ உலக மோதலும்
மருத்துவர்களின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட மருத்துவ சாதனமாக தங்களது தயாரிப்பைக் கொண்டுவரவில்லை எனக் குறிப்பிட்டுள்ள கோயல், எதிர்காலத்தில் இதன் அறிவியல் ஆய்வுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் எனக் கூறியுள்ளார்.
ஆனால், ஹூப் (Whoop) போன்ற பிற சாதனங்கள் உடலின் இயற்பியல் வரம்பிற்குட்பட்ட தரவுகளை மட்டுமே அளவிட்ட நிலையில், டெம்பிள் சாதனம் சாத்தியமற்ற விஷயங்களை உரிமை கோருவதாக TheLiverDoc மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால், சமூக வலைதளங்களில் கோயலின் டெம்பிள் சாதனம் குறித்த காரசாரமான விவாதங்கள் தொடர்ந்து முற்றி வருகின்றன.