LOADING...
உங்கள் மகள் திடீரென அமைதியாகிவிட்டாரா? அது வெறும் 'மூட் ஸ்விங்' அல்ல; எச்சரிக்கையாக இருங்கள்!
வளரும் பெண் குழந்தைகள் முன்னெப்போதும் இல்லாத மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்

உங்கள் மகள் திடீரென அமைதியாகிவிட்டாரா? அது வெறும் 'மூட் ஸ்விங்' அல்ல; எச்சரிக்கையாக இருங்கள்!

எழுதியவர் Venkatalakshmi V
Feb 17, 2026
08:08 am

செய்தி முன்னோட்டம்

இன்றைய போட்டி நிறைந்த கல்விச் சூழல், சமூக ஊடகங்களின் தாக்கம் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவற்றிற்கு மத்தியில் வளரும் பெண் குழந்தைகள் முன்னெப்போதும் இல்லாத மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். பொதுவாக, மன அழுத்தம் என்றாலே அழுது வடிவது அல்லது சோகமாக இருப்பது என்று நாம் நினைக்கிறோம். ஆனால், பதின்வயது பெண்களிடம் அது கோபம், எரிச்சல் அல்லது அமைதி என்ற பெயரில் மறைந்திருக்கும் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.

அறிகுறிகள்

பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்

1. சோகத்திற்கு பதில் எரிச்சல்: குழந்தைகள் எப்போதும் எரிச்சலுடனும், சின்னஞ்சிறு விஷயங்களுக்கு கூட வாக்குவாதம் செய்தாலோ அல்லது கோபப்பட்டாலோ அது மன அழுத்தத்தின் அறிகுறியாக இருக்கலாம். 2. சமூக விலகல்: எப்போதும் கலகலப்பாக இருந்த குழந்தை, திடீரென அறைக்குள்ளேயே முடங்குவது, தோழிகளுடன் பேசுவதை தவிர்ப்பது அல்லது பிடித்த பொழுதுபோக்குகளில் ஆர்வம் காட்டுவதை நிறுத்துவது கவலைக்குரிய விஷயம். 3. விவரிக்க முடியாத உடல் உபாதைகள்: அடிக்கடி தலைவலி, வயிற்று வலி, அதீத சோர்வு அல்லது தூக்கமின்மை போன்றவை மன அழுத்தத்தின் உடல் ரீதியான வெளிப்பாடுகளாக இருக்கலாம். 4. கல்வித்திறன் குறைதல்: கவனமின்மை மற்றும் ஞாபக மறதி காரணமாக பாடங்களில் பின்தங்குவது மன அழுத்தத்தால் ஏற்பட வாய்ப்புண்டு.

நம்பிக்கையின்மை

அதிகரிக்கும் நம்பிக்கையின்மையை கவனத்தில் கொள்ளவேண்டும்

5. அலட்சியமான மனநிலை: "எனக்கு எதைப் பற்றியும் கவலையில்லை" (I don't care) என்பது போன்ற பதில்கள் அல்லது எதற்கெடுத்தாலும் கிண்டலாகப் பேசுவது, அவர்களின் மனக்காயங்களை மறைக்க அவர்கள் பயன்படுத்தும் தற்காப்புக் கவசமாக இருக்கலாம். 6. சுய பழிவாங்கல்: தங்களை தாங்களே தாழ்த்தி பேசுவது, தங்களுக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்புகளை தட்டிப்பழிப்பது போன்றவை நம்பிக்கையின்மையை காட்டுகிறது. இந்த நேரத்தில் பெற்றோர்கள் குழந்தைகளின் நடத்தையை தண்டிப்பதற்கு பதிலாக, அன்புடன் அணுக வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். அமைதியான நேரத்தில் உரையாடலைத் தொடங்கி, அவர்களின் உணர்வுகளை கேலி செய்யாமல் அங்கீகரிக்க வேண்டும். சரியான தூக்கம், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான நட்பு வட்டத்தை உறுதி செய்வதும் பெற்றோரின் கடமையாகும்.

Advertisement