LOADING...
சூயிங்கம் தெரியாமல் விழுங்கிவிட்டாலும் ஆபத்தில்லைனு நினைக்கிறீங்களா? முதலில் இதை தெரிஞ்சிக்கோங்க
சூயிங்கம் விழுங்குவதால் ஏற்படும் ஆபத்து குறித்த கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள்

சூயிங்கம் தெரியாமல் விழுங்கிவிட்டாலும் ஆபத்தில்லைனு நினைக்கிறீங்களா? முதலில் இதை தெரிஞ்சிக்கோங்க

எழுதியவர் Sekar Chinnappan
Nov 24, 2025
04:53 pm

செய்தி முன்னோட்டம்

சூயிங்கம் எனும் பபுள் கம்மை விழுங்கினால், அது ஏழு ஆண்டுகள் வயிற்றிலேயே தங்கி இருக்கும் என்ற பொதுவான எச்சரிக்கை பல காலமாகப் பேசப்பட்டாலும், மருத்துவ ரீதியாக இது வெறும் கட்டுக்கதையே ஆகும். எதிர்பாராமல் ஒரு பபுள் கம்மை விழுங்குவது பெரும்பாலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும், பொதுவாகச் செரிமானப் பாதை அதைச் சில நாட்களிலேயே மற்றக் கழிவுகளுடன் வெளியேற்றிவிடும் என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

செயல்பாடு 

உடலில் பபுள் கம் எவ்வாறு செயல்படுகிறது? 

பபுள் கம்மின் முக்கிய அங்கமான ரப்பர் போன்ற "கம் பேஸ்" (Gum Base) ஆனது, எலாஸ்டோமர்கள், ரெசின்கள் மற்றும் மெழுகுகளால் ஆனது. இவை செரிமான நொதிகளால் உடைக்கப்பட முடியாதவை. இருப்பினும், நமது இரைப்பைக் குடல் பாதை (Gastrointestinal tract) தசைச் சுருக்கங்கள் (Peristalsis) மூலம் உணவு மற்றும் செரிக்கப்படாத பொருட்களை நகர்த்துகிறது. எனவே, ஒரு சிறிய, செரிக்கப்படாத பொருள் போலச் செயல்படும் பபுள் கம், ஆரோக்கியமான ஒருவருக்குச் சில நாட்களில் குடல் வழியாக வெளியேற்றப்படும்.

அடைப்பு

அடைப்பு அபாயம்

ஒரு பபுள் கம்மை தெரியாமல் விழுங்கிவிட்டாலும், அதனால் ஆபத்தில்லை என்றாலும், அரிதான சந்தர்ப்பங்களில் இது குடல் அடைப்பை (Intestinal Obstruction) ஏற்படுத்தலாம். குறிப்பாக, ஒரே நேரத்தில் அதிக அளவு பபுள் கம்மை விழுங்குவது அல்லது தொடர்ந்து கம் விழுங்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த ஆபத்து அதிகம். பபுள் கம் குவிந்து ஒரு சிறிய கல் போன்ற கட்டியான பீஸோரை (Bezoar) உருவாக்கலாம், இது குடலை அடைக்கும். சிறு குழந்தைகள், ஏற்கனவே குடல் அறுவை சிகிச்சை செய்தவர்கள், அல்லது செரிமானக் கோளாறுகள் உள்ளவர்கள் இந்த ஆபத்துக்கு அதிகம் ஆளாக நேரிடலாம் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சர்க்கரை

சர்க்கரை இல்லாத பபுள் கம்

சர்க்கரை இல்லாத பபுள் கம் என கூறப்படும் பல பபுள் கம்களிலும் சர்க்கரை ஆல்கஹால்கள் (சர்பிடால் போன்றவை) உள்ளன. இவை அதிக அளவில் உட்கொள்ளப்படும்போது வாயு, வயிறு வீக்கம் அல்லது வயிற்றுப்போக்கை (Osmotic diarrhoea) ஏற்படுத்தலாம். இது அடைப்பு போன்ற ஆபத்து இல்லை என்றாலும், கவனிக்க வேண்டிய மற்றொரு செரிமானப் பாதிப்பாகும்.

மருத்துவ உதவி

எப்போது மருத்துவ உதவியை நாட வேண்டும்?

கம்மை விழுங்கிய ஒருவர் பின்வரும் தீவிர அறிகுறிகளை எதிர்கொண்டால், தாமதமின்றி மருத்துவ உதவியை நாட வேண்டும்: தொடர்ச்சியான அல்லது தீவிரமான வயிற்று வலி மீண்டும் மீண்டும் வாந்தி எடுத்தல் மலம் அல்லது வாய்வு வெளியேறாமல் இருத்தல் (Constipation or inability to pass gas) வயிற்றுப் பகுதியில் வீக்கம் நீரிழப்பின் அறிகுறிகள்

குழந்தைகள்

குழந்தைகளிடம் பபுள் கம் கொடுப்பதில் எச்சரிக்கை 

சிறு குழந்தைகளுக்கு, கம் விழுங்குவதை விடவும், அது மூச்சுக் குழாயில் சிக்கி சுவாசப் பிரச்னையை ஏற்படுத்துவது மிக உடனடியான ஆபத்தாகும். அத்தகைய சூழ்நிலையில் அவசர சேவைகளை நாடுவது அவசியம். ஒரு கம்மை தவறுதலாக விழுங்குவது பெரும்பாலும் தீங்கு விளைவிக்காது என்றாலும், பாதுகாப்பான பழக்கவழக்கங்களை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்பதும், சிறிய குழந்தைகளுக்கு பபுள் கம் கொடுப்பதைத் தவிர்ப்பதும் சிறந்தது.