
கோடையில் சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயம் அதிகம்; நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியவை
செய்தி முன்னோட்டம்
சிறுநீரக கற்கள் என்பது சிறுநீரில் உள்ள உப்புகள் மற்றும் தாதுக்கள் அதிகமாகச் செறிந்து, கடினமான படிகங்களாக உருவாகும் அமைப்புகள்.
இவை சிறுநீரகத்தில் தேங்கி வலி, எரிச்சல் போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும்.
இத்தகைய சிறுநீரக கற்கள் உருவாக பல காரணிகள் இருப்பினும், கோடை மாதங்களில் சிறுநீரக கற்கள் உருவாகும் ஆபத்து கணிசமாக அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
கோடையில் வியர்வை மூலம் உடலிலிருந்து அதிக தண்ணீர் இழக்கப்படுகிறது.
இது சிறுநீரை செறிவாக்கி, அதிலுள்ள உப்புகள் மற்றும் தாதுக்கள் படிகமாகி கல் உருவாவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
அதனால், கோடை காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம் ஆகிறது.
சிறுநீரக கற்களின் வகைகளும், அவற்றை தவிர்ப்பது எப்படி என்பதையும் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.
தவிர்க்கும் வழிகள்
சிறுநீரக கற்கள் உருவாவதை எப்படி தவிர்ப்பது?
நிறைய தண்ணீர் குடிக்கவும்- உடலை சுத்திகரித்து, தாதுக்களை வெளிக்கொணர உதவும்.
சிறுநீரின் நிறத்தை கவனிக்கவும் - அது வெளிர் வைக்கோல் நிறமாக இருக்க வேண்டும்; அடர்ந்த மஞ்சள் நிறம் நீரிழப்பை உணர்த்தும்.
ஆக்ஸலேட் அதிகம் உள்ள உணவுகளை கட்டுப்படுத்தவும் - (பீட்ரூட், கீரை, ருபார்ப் போன்றவை).
உப்பும் விலங்கு புரதங்களும் குறைக்கவும் - அதிக உப்பும் புரதமும் கற்கள் உருவாக மூலக்காரணிகளாகும்.
வகைகள் மற்றும் அறிகுறிகள்
சிறுநீரக கற்களின் வகைகள் மற்றும் நீங்கள் கவனிக்க வேண்டிய அறிகுறிகள்:
சிறுநீரக கற்கள் பலவகைப்படுகிறது. அதிக உப்பு அல்லது அதிக புரதம் என பலவகைகளாக பிரிக்கப்படுகிறது இந்த கற்கள்.
தடுப்பு முறைகளை மேற்கொள்ளும் அதே நேரத்தில் அவற்றின் வகைகளையும் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.
கால்சியம் ஆக்ஸலேட் கற்கள்- சிறுநீரில் அதிக கால்சியம் இருப்பதால் ஏற்படும்.
யூரிக் அமிலக் கற்கள்- அதிக புரத உணவுகள், நீரிழிவு, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் காரணமாக உருவாகும்.
ஸ்ட்ரூவைட் கற்கள் - சிறுநீர் பாதை தொற்றுகள் (UTI) காரணமாக ஏற்படும்.
நீங்கள் கவனிக்க வேண்டிய அறிகுறிகள்:
கடுமையான வயிற்று அல்லது இடுப்பு வலி
குமட்டல், வாந்தி
சிறுநீரில் குருதி அல்லது எரிச்சல்
இந்த அறிகுறிகள் இருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்