
தமிழ் புத்தாண்டிற்கு உங்கள் வீட்டு சமையல் மெனு என்ன?
செய்தி முன்னோட்டம்
உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் ஏப்ரல் 14ஆம் தேதி அன்று தமிழ் புத்தாண்டை கொண்டாடுவர்.
இந்த நாளில், புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று ஒருவரையொருவர் வாழ்த்திக் கொண்டும், புத்தாடைகள் அணிந்தும் வீட்டை அலங்கரித்தும், சிறப்பு உணவுகள் செய்தும் மகிழ்வார்கள்.
இந்த உணவுகளை நேசமிகு உறவுகளுடன் பகிர்ந்தளித்தலும் வழக்கம்.
தலைவாழை இலையில், காய்கறி பொரியல், கூட்டு, சாம்பார், ரசம், மசால் வடை, பாயசம் என அறுசுவையும் சேர்ந்த உணவு வகைகளை சமைத்து உண்பது மரபு.
இந்த ராஜபோக உணவுகளுடன், நீர் மோர் அல்லது பானகமும் பரிமாறப்படுவது வழக்கம்.
தமிழ் புத்தாண்டு அன்று என்ன வகையான சிறப்பு உணவுகள் செய்யலாம் என உங்களுக்கு உதவ டிப்ஸ் இதோ:
உணவு வகைகள்
பருப்பு வடை முதல் பாயசம் வரை
மசாலா வடை: மொறுமொறுப்பான, கடலை பருப்பு மற்றும் பாசிப்பருப்பு சேர்த்து செய்யும் வடை. இது சிறப்பு நாளில் செய்யப்படும் சிறந்த ஸ்நாக்ஸ் ஆகும்.
பூசணிக்காய் சாம்பார்: பூசணிக்காய் சாம்பாரில், தேங்காய், மல்லிவிதை, காய்ந்த மிளகாய் மற்றும் தேங்காய் சேர்த்து அரைத்து விட்ட சாம்பார், இந்த நாளன்று செய்யலாம்.
ரசம்: தக்காளி, புளி, சீரகம், மிளகாய் சேர்த்து தயாரிக்கும் காரமான ரசம், ஜீரணத்திற்கு நல்லது.
கீரை பொரியல்: வெங்காயம், கீரை மற்றும் தேங்காய் சேர்த்து பரிமாறப்படும் ஆரோக்கியமான ஒரு காய் பொரியல்.
சர்க்கரைப் பொங்கல்: வெல்லம், அரிசி, பருப்பு மற்றும் நெய் நிறைந்த இந்த உணவு, தமிழ் புத்தாண்டில் தவறாமல் செய்யப்படும் ஒன்று.
பாயசம்: ஜவ்வரிசி, பாசிப்பருப்பு, அல்லது அவல் கொண்டு தயாரிக்கும் இனிப்பு.
மற்றவை
அவியல் முதல் மோர் குழம்பு வரை
அவியல்: பல காய்கறிகள் சேர்த்து செய்யும் அவியல் இலையில் இடம்பெறும்
வறுவல்: உருளைகிழங்கு அல்லது வாழைக்காய் உடன் காரம் சேர்த்து எண்ணையில் பிரட்டி எடுக்கும் இந்த சைடு டிஷ், சாம்பார் மற்றும் ரசம் உள்ளிட்ட உணவிற்கு ஏற்றதாகும்.
மோர் குழம்பு: வெண்டைக்காய் அல்லது மோர் மிளகாய் மற்றும் மோர் சேர்த்து செய்யப்படும் இந்த மோர் குழம்பு, இந்த வெயில் காலத்திற்கு ஏற்ற உணவாகும்.
வத்தல் குழம்பு: சுண்ட வத்தல், புளி சேர்த்து செய்யப்படும் இந்த குழம்பு வகை, தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றாகும்.
இவற்றுடன், உடல் சூட்டை தணிக்கும் நீர் மோர் அல்லது வெல்லம், சுக்கு மற்றும் புளி சாறு கலந்து தயாரிக்கப்படும் பானகமும் கட்டாயம் இடம்பெறும்.