உலக நாடுகளில் புழக்கத்தில் இருந்த சில வித்தியாசமான கரன்சி நோட்டுகள் பற்றி ஒரு பார்வை
UPI பரிவர்த்தனைகள் முதல் கிரிப்டோகரன்சி வரை முன்னேறியுள்ள இந்த காலத்தில், தேயிலை செங்கற்களை கூட காசாக உபயோகித்த காலமும், நாடும் உண்டென்றால் நம்ப முடிகிறதா? உலகத்தில் புழக்கத்தில் இருந்த/ இருக்கும் சில வித்தியாசமான கரன்சிகளை பற்றி ஒரு பார்வை: ஆஸ்திரேலிய டாலர்கள்: ஆஸ்திரேலிய டாலர்கள் அனைத்துமே வாட்டர் ப்ரூப் (waterproof) மற்றும் எளிதில் கள்ளநோட்டாக அச்சடிக்க முடியாது. ஏனென்றால், அவை பாலிமரால் தயாரிக்கப்படுபவை. மேலும், தற்போதுள்ள ஆஸ்திரேலிய டாலர்கள், 3D எபெக்ட்டுடன் அச்சடிக்கப்படுகிறது. காங்கோவின் வித்தியாசமான ரூபாய் நோட்டுகள்: ஜோசப் மொபுட்டுவின் கொடுங்கோல் ஆட்சி 1997 இல் முடிவுக்கு வந்ததும், அப்போது இருந்த அரசு, புது நோட்டு அச்சடிக்கும் வரை, புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளில், மொபுட்டுவின் படங்களை நீக்கி உபயோகிக்குமாறு அறிவித்தது.
தேயிலை செங்கற்கள் முதல் மர நாணயங்கள் வரை
தேயிலை செங்கற்கள்: சீனா, மங்கோலியா மற்றும் திபெத் மக்கள், 9 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை, தேயிலை செங்கற்களை நாணயமாக உபயோகித்தனர். தேயிலை இலைகளின் தரத்தை பொறுத்து, நாணயத்தின் மதிப்பு மாறும். இவை 9 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்தன. அவசர பணம்: முதலாம் உலக போருக்கு பிறகு, சீர்குலைந்து போன ஜெர்மனியின் பொருளாதார நிலைமையை சீர் செய்ய, இந்த அவசர பணம் முறை கொண்டு வரப்பட்டது. யூரோ அப்போது புழக்கத்தில் இல்லாததால், அலுமினியத் தகடு முதல் பட்டுத் துணிகள், பீங்கான் மற்றும் மரம் வரை, தங்களுக்குக் கிடைக்கிற எல்லாவற்றிலும் பணத்தை அச்சடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.