
புரட்டாசி ஸ்பெஷல்: ஸ்ரீரங்கம் கோவில் ஸ்பெஷல் அக்காரவடிசல் செய்வது எப்படி?
செய்தி முன்னோட்டம்
புரட்டாசி மாதம், இந்துக்களின் நம்பிக்கைப்படி, பெருமாளுக்கு உகந்த மாதம்.
அதனால், இந்த வாரம் ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலின் பேமஸ் அக்காரவடிசல் செய்வது எப்படி என்பதை பாப்போம்.
அக்காரவடிசல் என்பது அரிசி மற்றும் பருப்பை, பால் மற்றும் வெல்லம் பாகில் சமைத்து, நெய், முந்திரி தூவி தயாரிக்கப்படும் ஒரு இனிப்பு உணவாகும்.
அக்காரவடிசல், சக்கரை பொங்கலை போன்ற தோற்றத்தில் இருந்தாலும், சுவையில் மாறுபட்டே இருக்கும். அதற்கு காரணம், அதனுடன் சேர்க்கப்படும் பொருள்களின் அளவுகள், இரண்டிற்குமே வேறுபட்டிருக்கும்.
பொங்கலுக்கு 1 அளவு அரிசிக்கு ½ அளவு பருப்பு பயன்படுத்துகிறது. ஆனால் அக்கரவடிசல் என்பது அதற்கு நேர்மாறானது - 1 அளவு பருப்பிற்கு ½ அளவு அரிசி பயன்படுத்தப்படுகிறது.
இந்த சுவையான உணவின் செய்முறை விளக்கத்தை பார்ப்போம்.
card 2
தேவையான பொருட்கள்
1/2 கப் அரிசி
1/8 கப் பாசி பருப்பு
5 கப் காய்ச்சாத முழு கிரீம் பால்
1 கப் தண்ணீர் + 1/2 கப் தண்ணீர் (வெல்லம் உருகுவதற்கு)
1 கப் வெல்லம்
1/4 கப் நெய்
சில இழைகள் குங்குமப்பூ
10 முந்திரி
ஒரு சிட்டிகை பச்சைகற்பூரம்
ஒரு சிறிய சிட்டிகை உப்பு
card 3
செய்முறை
1/2 கப் பச்சை அரிசி மற்றும் 1/8 கப் பருப்பு எடுத்து, அதை நன்றாக கழுவி, ஊற வைக்கவும்.
ஒரு அகண்ட, கனமான பாத்திரத்தில், 1 டேபிள் ஸ்பூன் நெய்யை சூடாக்கவும். அதில், 10 துண்டு முந்திரி (உடைந்தது) சேர்க்கவும்.
அதே நேரத்தில், மற்றொரு பாத்திரத்தில், 1 கப் வெல்லம் மற்றும் 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும். வெல்லம் முழுவதுமாக உருகும் வரை சூடாக்கவும்.
வெல்லப்பாகின் பதத்தை பற்றி சரிபார்க்க வேண்டிய அவசியமில்லை. வெல்லம் முழுவதுமாக உருகட்டும்.
பின்னர் அடுப்பை அணைக்கவும்.
அசுத்தங்கள் ஏதேனும் இருந்தால் வடிகட்டியைப் பயன்படுத்தி சிரப்பை வடிகட்டவும்.
card 4
செய்முறை
அடி கனமான பாத்திரத்தில் 5 கப் முழு கிரீம் பால், 1 கப் தண்ணீர் சேர்க்கவும். மிதமான தீயில் பாலை கொதிக்க வைக்கவும்.
அடிபிடிக்காமல் இருக்க, இடையே கிளறவும்.
பின்னர் கழுவிய அரிசி, பருப்பு சேர்க்கவும்.
அரிசி மற்றும் பருப்பு நன்றாக வேக, குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் ஆகும். எனவே தொடர்ந்து இடையிடையே கிளறி, குறைந்த தீயில் சமைக்கவும்.
அரிசி நன்றாக வெந்தததும், அதாவது கிட்டத்தட்ட 3/4 அளவு பால் சுண்டியதும், அதனுடன் வெல்லம் பாகு சேர்க்கவும்.
ஒரு சிறிய சிட்டிகை பச்சை கற்பூரம், 1/4 தேக்கரண்டி ஏலக்காய் தூள், குங்குமப்பூ மற்றும் ஒரு சிறிய சிட்டிகை உப்பு சேர்க்கவும்.
நன்கு கலந்து கிளறி, கெட்டியாகும் வரை வேக விடவும்.
card 5
செய்முறை
கலவை சிறிது கெட்டியானதும் எடுத்துவைத்துள்ள நெய்யில் பாதியளவை சேர்க்கவும்.
நெய் முழுவதுமாக உறிஞ்சப்படும் வரை சமைக்கவும். இறுதியாக வறுத்த முந்திரி மற்றும் மீதமுள்ள நெய் சேர்க்கவும்.
அக்காரவடிசல் தயார்!
பின்குறிப்பு: அக்கரவடிசலை அடிப்பாகம் தடிமனான பாத்திரத்தில் சமைக்க வேண்டும். அப்போதுதான் மெதுவாக அரிசி வெந்து, அதன் தனிப்பட்ட சுவையை பெறும். பித்தளை பாத்திரத்தில் சமைப்பது உசிதம். பாரம்பரியமாக கோவில்களில் வெண்கலப் பாத்திரத்தில் அக்காரவடிசலைச் சமைப்பார்கள்.