புரட்டாசி மாத ஸ்பெஷல் ரெசிபி: சுலபமாக 'எம்டி சால்னா' செய்வது எப்படி?
உணவு குறிப்புகள்: தமிழகத்தில் கிடைக்கும் மிக ருசியான உணவுகளில் ஒன்று பரோட்டா-சால்னா. ஆனால், புரட்டாசி மாதம் என்றால் கடைகளில் விற்கும் சால்னாவை வாங்கி சாப்பிட சிலர் தயங்குவார்கள். அப்படி ஒரு சூழ்நிலையில், வீட்டிலேயே சுலபமாக 'சைவ எம்டி சால்னா' எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம். தேவையான பொருட்கள்: வெங்காயம்- 2(நறுக்கியது) தக்காளி- 2(நறுக்கியது) இஞ்சி பூண்டு விழுது- 2 தேக்கரண்டி புதினா இலைகளை- 3 தேக்கரண்டி(நறுக்கியது) கொத்தமல்லி இலைகளை-¼ கப்(நறுக்கியது) கடலை மாவு- 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு- 1 தேக்கரண்டி தண்ணீர்- 7 கப் உப்பு- தேவையான அளவு
தேவையான பொடிகள்:
மஞ்சள் தூள்- ¼ தேக்கரண்டி பெருஞ்சீரகத் தூள்- 1 தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள் அல்லது பிரியாணி மசாலா தூள்- 1 தேக்கரண்டி சாம்பார் பொடி- 2 முதல் 3 மேசைக்கரண்டி மசாலா அரைப்பதற்கு தேவையானவை: துருவிய தேங்காய்- ½ கப் முந்திரி- 8 வறுத்த பொட்டுகடலை- 1 தேக்கரண்டி தாளிப்பதற்கு தேவையானவை: எண்ணெய்- 3 முதல் 4 தேக்கரண்டி ஏலக்காய்- 2 1 அங்குல இலவங்கப்பட்டை கிராம்பு- 3 நட்சத்திர சோம்பு- 1 பிரியாணி இலை- 1 கறிவேப்பிலை- சிறிதளவு
சால்னா செய்ய ஆரம்பிப்பதற்கு முன் செய்ய வேண்டியவை
முதலில் மசாலா பேஸ்ட்டை அரைத்து தயாராக வைத்து கொள்ளவும். ½ கப் துருவிய தேங்காய், 1 தேக்கரண்டி வறுத்த பொட்டுக்கடலை, 8 முந்திரி, ½ கப் தண்ணீர் சேர்த்து மிருதுவாக மிக்சியில் போட்டு அரைத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். அடுத்தது, 1 தேக்கரண்டி கடலை மாவை, 2-3 தேக்கரண்டி தண்ணீரில் போட்டு கட்டிகள் இல்லாமல் கரைக்கவும்.
'எம்டி சால்னா' செய்முறை:
கனமான கடாயை அடுப்பில் வைத்து, எடுத்து வைத்திருக்கும் சமையல் எண்ணெயை அதில் ஊற்றி சூடாக்கவும். 'தாளிப்பதற்கு தேவையானவை' என்பதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து பொருட்களையும் ஒவ்வொன்றாக எண்ணெயில் சேர்க்கவும். நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை கடாயில் கொட்டி, அதில் சிறிதளவு உப்பை சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் கைவிடாமல் கிளறவும். அதன் பிறகு, பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும். பின்னர், 'தேவையான பொடிகள்' என்பதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து பொருட்களையும் ஒவ்வொன்றாக சேர்த்து கிளறவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக கிளற வேண்டும். இப்போது, அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, ஒரு நிமிடம் நன்கு கலக்கவும். பின், புதினாவையும் பாதி கொத்தமல்லி இலைகளையும் சேர்க்கவும்.
'எம்டி சால்னா' செய்முறை:
அதன் பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக 7 கப் தண்ணீரை சேர்த்து கலக்கவும். அதோடு, தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீரில் கரைத்து வைத்திருக்கும் கடலை மாவையும் சேர்க்கவும். சால்னா கொதித்து வந்ததும், கடாயை மூடிவைத்து மிதமான சூட்டில் சால்னாவை 15 நிமிடங்கள் வேக வைக்கவும். இடை இடையே சால்னாவை கலக்கி விட்டு கொள்ளலாம். பின்னர், 7-10 நிமிடங்களுக்கு மூடியை திறந்து வைத்து சால்னா கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும். சுடசுட சால்னா தயார்! அதை இறக்கி வைத்துவிட்டு, அதில் எலுமிச்சை சாறு, கொத்தமல்லி இலைகள் மற்றும் கருவேப்பிலை தூவி பரிமாறவும். சப்பாத்தி, பரோட்டா, பிரியாணி, குஸ்கா போன்ற உணவுகளுக்கு ஏற்ற சால்னா இதுவாகும்.
இந்த காலவரிசையைப் பகிரவும்