ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே: வாடகை சைக்கிளில் குரங்கு பெடல் அடித்தது ஞாபகம் இருக்கிறதா?
நீங்கள் 80'ஸ், 90'ஸ் கிட்ஸ்-அ? தெரு முக்கில் இருக்கும் கடையில், 50 பைசாவுக்கு, 30 நிமிடம் வாடகை சைக்கிள் எடுத்து ஒட்டியது நினைவில் இருக்கிறதா? அந்த பசுமையான நினைவலைகளை இன்று சிறிது ஒட்டி பார்க்கலாமா? சிலேட்டு பலகையில், சாக் பீசில், "இங்கு வாடகைக்கு சைக்கிள் விடப்படும்" என எழுதப்பட்டு இருக்கும் கடை முன்பு, வார இறுதியில் காத்திருந்த நாட்கள் நினைவில் இருக்கிறதா? உங்கள் வயதிற்கும், உங்கள் உயரத்திற்கும் ஏற்ற சைக்கிள் வரும்வரை, நீங்கள் காத்திருந்த தருணம்; விடுமுறைக்காக ஊர் பக்கம் செல்லும் போது, அங்கிருக்கும் கடைக்காரர்,"தெரிந்தவருக்கு மட்டும் தான் சைக்கிள் தருவேன்" எனும் போது, வீட்டிலிருக்கும், மாமா, சித்தப்பாவை அழைத்து போய் அறிமுகம் செய்து வைக்க நச்சரிப்பதாகட்டும், அதெல்லாம் என்றும் நினைவில் நீங்காதவை.
வாழ்க்கையின் ஒரு அங்கமாகி போன வாடகை சைக்கிள்
அப்போதெல்லாம், தின வாடகைக்கு மற்றும் வார வாடகைக்கு சைக்கிள்கள் தருவார்கள். வயக்காட்டில் வேலைக்கு செல்பவர்கள், தினமும் பக்கத்துக்கு ஊருக்கு வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் முதலில் அணுகக்கூடிய நபராக இந்த சைக்கிள் கடைக்காரர் தான் இருந்தார். ஊரில் இருக்கும் அனைவரைப்பற்றியும் அவர் தெரிந்து வைத்திருப்பார். அப்படி சைக்கிள் ஒட்டிய காலத்தில், 70-வயது கிழவர் கூட, திடகாத்திரமாகவும், சுகர், கொலஸ்ட்ரால் என எந்த வியாதியும் இன்றி நடமாடினார்கள். அந்த காலத்தில் இது தான் நடமாடும் ஜிம். குரங்கு பெடல் அடித்து சிறுவர்கள் வண்டி ஓட்ட கற்றுக்கொள்வதும், திருவிழாவின் போது, சைக்கிளில் ரேஸ் போவதாகட்டும், காதலிக்கு சிக்னல் தருவதற்கும், பால்,பேப்பர், தபால் வந்துவிட்டது என குறிப்பதற்கு பெல் அடிப்பதும், இன்றும் பசுமையாக நினைவில் இருக்கும் நினைவுகள்.