தேசிய தடுப்பூசி தினம் 2023: அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி தெரிந்துகொள்வோம்
இன்றைய மனித வாழ்வின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, தடுப்பூசிகள் முக்கியமான பங்கு கொண்டுள்ளது. அத்தகைய தடுப்பூசிகள் முக்கியத்துவத்தை அங்கீகரிக்க, ஆண்டுதோறும், இந்த மார்ச் 16 -ஐ தேசிய தடுப்பூசிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில், உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு எதிராக போராட, தடுப்பூசிகள் உதவுவதையும், தடுப்பூசியின் பங்கை குறித்து மக்களுக்கு மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த நாளை தேர்வு செய்துள்ளது மருத்துவ உலகம். அதனால், இந்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 16 ஆம் தேதியை தேசிய தடுப்பூசி தினமாக கொண்டாடுகிறது. இந்த நாளில் பரவலாக இருக்கும் கொடிய நோய் தொற்றுகளையும், அவற்றிற்கு எதிராக தடுப்பூசிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை குறித்து மக்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல பிரச்சாரங்களும், கருத்தரங்கங்களும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
தேசிய தடுப்பூசி தினத்தின் வரலாறு
இந்தியாவில், 1995 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி, வாய்வழி போலியோ தடுப்பு சொட்டு மருந்தின், முதல் டோஸ் வழங்கப்பட்டது. எனவே, நாட்டில் இருந்து போலியோவை ஒழிக்க உதவிய, அரசின் பல்ஸ் போலியோ திட்டத்தின் தொடக்கத்தை அங்கீகரிக்க, தேசிய தடுப்பூசி தினமாக கொண்டாடப்படுகிறது. பல்ஸ் போலியோ திட்டத்தின் முதன்மைப் பகுதியாக, 0 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு, வாய்வழி போலியோ சொட்டு மருந்து, இரண்டு சொட்டுகள் வழங்கப்பட்டன. இது நாடு தழுவிய அளவில், அரசு பிரச்சாரத்தின் மூலம் பிரபலமடைந்து, 2014ல் வேகம் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, உலக சுகாதார நிறுவனம் (WHO) இந்தியாவை போலியோ இல்லாத நாடாக மாறிவிட்டது என்று அறிவித்தது.