2023ஆம் ஆண்டின் மிஸ் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார் நந்தினி குப்தா! யார் அந்த நந்தினி?
இந்தாண்டின் மிஸ் இந்தியா பட்டத்தை வென்றவர் நந்தினி குப்தா. ஏப்ரல் 15 அன்று, மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள குமான் லாம்பாக் உள்ளரங்க அரங்கில் நடைபெற்ற இந்த இறுதி போட்டியில், நந்தினி மிஸ் இந்தியா அழகி பட்டத்தை வென்றார். ராஜஸ்தானின் கோட்டாவைச் சேர்ந்தவர் நந்தினி குப்தா. நந்தினிக்கு சிறு வயது முதலே அழகி போட்டிக்கு பங்குகொள்ள வேண்டும் என்று ஆசை இருந்துள்ளது. இதற்காக 10 வயது முதலே கனவு கண்டு வந்துள்ளாராம். நந்தினி, தனது பள்ளிப் படிப்பை செயின்ட் பால்ஸ் சீனியர் செகண்டரி பள்ளியில் முடித்தார். தற்போது லாலா லஜபதி ராய் கல்லூரியில் வணிக மேலாண்மை படித்து வருகிறார்.
உலக அழகி போட்டியில் இந்தியா சார்பாக நந்தினி கலந்து கொள்வார்
போட்டியின் இறுதி சுற்றில், தன்னுடைய ரோல் மாடலாக, பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா-வையும், உலக அழகியும் நடிகையுமான பிரியங்கா சோப்ராவை கூறினார். இவர்கள் இருவரும் தங்கள் தொழில் சாதித்தது மட்டுமின்றி, சமூக சேவையிலும் ஈடுபடுவது, தன்னை கவர்ந்ததாக கூறினார். மிஸ் இந்தியா பட்டத்தை வென்றதனால், அடுத்து நடைபெறும் உலக அழகி போட்டிக்கு இந்தியா சார்பாக நந்தினி கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான உலக அழகி போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. மிஸ் இந்தியா போட்டியில், நந்தினியை தொடர்ந்து, டெல்லியின் ஸ்ரேயா பூஞ்சா மற்றும் மணிப்பூரின் தூணோஜாம் ஸ்ட்ரெலா லுவாங் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை வென்றனர். இந்த அழகி போட்டியில், பல பிரபலங்களும், முன்னாள் அழகிகளும் கலந்துகொண்டனர்.