Loading...
மீண்டும் தீவிரமடையும் தட்டம்மை ஆபத்து! தடுப்பூசி குறைபாடே முதன்மைக் காரணம்; உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
மீண்டும் தீவிரமடையும் தட்டம்மை ஆபத்து

மீண்டும் தீவிரமடையும் தட்டம்மை ஆபத்து! தடுப்பூசி குறைபாடே முதன்மைக் காரணம்; உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Aug 22, 2026
06:06 pm

செய்தி முன்னோட்டம்

உலகின் மிக வேகமாக பரவக்கூடிய தீவிர வைரஸ் நோய்களில் ஒன்றான தட்டம்மை, உலகளவில் மீண்டும் பெரும் சுகாதார அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் உலகளவில் சுமார் 1.1 கோடிக்கும் அதிகமான மக்கள் தட்டம்மை நோயால் பாதிக்கப்படலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. முக்கியமாக ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையிலும், ஐரோப்பா மற்றும் அமெரிக்க கண்டங்களிலும் இதன் பரவல் தற்பொழுது கண்டறியப்பட்டுள்ளது.

காரணங்கள்

தட்டம்மை நோய் மீண்டும் அதிவேகமாகப் பரவுவதற்கான காரணங்கள்

தட்டம்மை நோய் மீண்டும் தலைதூக்குவதற்குத் தடுப்பூசி செலுத்தப்படும் விகிதம் கணிசமாகக் குறைந்ததே முதன்மைக் காரணமாகும்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் குழந்தைகளின் வழக்கமான தடுப்பூசி போடும் திட்டங்களில் மாபெரும் தடங்கல்கள் ஏற்பட்டன.

இதன் விளைவாக, கோடிக்கணக்கான குழந்தைகள் உரிய காலத்தில் தடுப்பூசியைப் பெற முடியாமல் போயின.

தடுப்பூசி இயக்கம் மூலம் பலருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட போதிலும், பல மில்லியன் குழந்தைகளுக்கு இன்னும் முதல் தவணைத் தடுப்பூசி கூட சென்றடையவில்லை என்பதே தற்போதைய கள நிலவரமாகும்.

யாருக்கு அதிக பாதிப்பு?

தட்டம்மை நோயால் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் நபர்கள் யார்?

தட்டம்மைக்கான தடுப்பூசியைப் பெறாத குழந்தைகள் இந்த நோய்க்கிருமியால் எளிதில் பாதிக்கப்படும் சூழலில் உள்ளனர்.

குறிப்பாக ஊட்டச்சத்து குறைபாடு, வறுமை, மோதல்கள் மற்றும் சுகாதார வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்குப் பாதிப்பு மிகக் கடுமையாக இருக்கும்.

வைட்டமின் ஏ குறைபாடு உள்ள குழந்தைகளுக்குத் தட்டம்மை தாக்கும் போது, அது அவர்களின் நுரையீரலைப் பாதித்து நியூமோனியா, தீவிர வயிற்றுப்போக்கு, மூளைக் காய்ச்சல் மற்றும் நிரந்தரக் கண்பார்வையிழப்பு போன்ற மிக ஆபத்தான பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும்.

ADVERTISEMENT

தடுப்பூசி

இரு தவணைத் தடுப்பூசியே தட்டம்மைக்கான சிறந்த ஒரே பாதுகாப்பு

தட்டம்மை நோயைக் குணப்படுத்துவதற்கு என்று பிரத்யேக வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சலைக் குறைப்பது, நீர்ச்சத்து இழப்பைத் தடுப்பது மற்றும் வைட்டமின் ஏ மாத்திரைகளை வழங்குவது போன்ற சிகிச்சை முறைகளே பின்பற்றப்படுகின்றன.

ஆனால், தட்டம்மை தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் சரியாகப் போட்டுக்கொண்டால், இந்நோயில் இருந்து 97 சதவீதம் வரை முழுமையான பாதுகாப்பைப் பெற முடியும் என மருத்துவர்கள் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.

ADVERTISEMENT

உடனடி நடவடிக்கை

பெற்றோர் உடனடியாக செய்ய வேண்டிய அத்தியாவசிய நடவடிக்கைகள்

தட்டம்மை பரவலைத் தடுக்கத் தடுப்பூசி போடும் இயக்கங்களை மறுபரிசீலனை செய்து தீவிரப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.

பெற்றோர் தங்களின் குழந்தைகளின் தடுப்பூசி அட்டவணையை உடனடியாகச் சரிபார்க்க வேண்டும்.

ஒருவேளை தட்டம்மைக்கான தகுந்த தடுப்பூசி தவணைகள் விடுபட்டிருந்தால், உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களையோ அல்லது தகுதியான மருத்துவர்களையோ அணுகித் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும்.

இதன் மூலமே நமது குழந்தைகளையும் நமது சமூகத்தையும் இந்த உயிராபத்தான நோயிலிருந்து முழுமையாக பாதுகாக்க முடியும்.

ADVERTISEMENT