மருத்துவம்: இதய வால்வு நோய்களின் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் சிகிச்சை
இதய வால்வு நோய்களை பற்றிய விழிப்புணர்வை தருவதற்காக, அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன், அமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரி மற்றும் ஹார்ட் வால்வ் வாய்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களுடன் இணைந்து, ஏஜிங் ரிசர்ச் கூட்டணியால், 2017-ல் இந்த நாளை, அமெரிக்காவின் தேசிய இதய வால்வு நோய்களுக்கான நாளாக அனுசரிக்கப்படுகிறது. இது அமெரிக்காவில் கொண்டாடப்பட்டாலும், உலகம் முழுவதும், இதய வால்வு நோயால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதயத்தின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வால்வுகள் சேதமடையும் போதோ அல்லது சரியாகச் செயல்படாதபோது இதயத்தின் வழியாக இரத்தம் சீரற்ற முறையில் பாய்கிறது. இந்த நோய் குறித்து மேலும் தெரிந்து கொள்ளுங்கள்: இந்த நோய்க்கான குறிப்பிட்ட அறிகுறிகளாக, மார்பு வலி, படபடப்பு, மூச்சுத் திணறல், சோர்வு போன்றவை இருக்கும்.
நோய்க்கான காரணிகள் யாவை?
வயது தொடர்பான தேய்மானம், பிறவி குறைபாடுகள், எண்டோகார்டிடிஸ் போன்ற நோய்த்தொற்றுகள் உட்பட இதய வால்வு நோய்க்கான பல காரணிகள் உள்ளன. நாள்பட்ட உயர் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு ஆகியவை வால்வை சேதப்படுத்தும். அதனோடு, புகைபிடித்தல், உடல் பருமன் மற்றும் உடற்பயிற்சியின்மை போன்ற வாழ்க்கை முறை காரணிகள் இந்த நோய் உண்டாகும் அபாயத்தை அதிகரிக்கலாம். இதய வால்வு நோய்க்கான சிகிச்சையானது, உங்கள் நோயின் தீவிரம் மற்றும் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட வால்வு ஆகியவற்றைப் பொறுத்தது. மருந்துகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் சில சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை ஆகியவை இந்த நோய்க்கான தீர்வாக கண்டறியப்பட்டுள்ளது.