மருத்துவம்: மஞ்சள் காமாலையின் அறிகுறிகளும் சிகிச்சைகளும் பற்றி தெரிந்துகொள்க
மஞ்சள் காமாலை பாதிக்கப்பட்ட நபரின் உடலின் பகங்களான, சருமம், கண்களின் வெள்ளை பகுதி போன்றவை மஞ்சள் நிறமாக மாறும் என்பது வரை அறிந்திருப்பீர்கள். ஆனால் அதற்கான காரணம் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் பற்றி விரிவாக காணலாம்: கல்லீரலில் சுரக்கும், மஞ்சள்-ஆரஞ்சு பித்த நிறமியான பிலிரூபின் அதிக அளவில் சுரப்பதால் இந்த நிலை ஏற்படுகிறது. இந்த சுரப்பியின் செயல்பாட்டில் ஏதேனும் சிக்கல் இருந்தாலோ, மருந்துகளின் பக்க விளைவுகளினாலோ, அதிகப்படியான மது அருந்துவதாலோ, பித்தப்பை நோய் அல்லது கணைய புற்றுநோய் போன்றவையும், மஞ்சள் காமாலையை உண்டாக்கலாம். கல்லீரலை பாதிக்கும் ஹெபடைடிஸ் அல்லது சிரோசிஸ் போன்ற தொற்றுகளும் மஞ்சள் காமாலைக்கான முக்கிய காரணீகளாகும்.
மஞ்சள் காமாலையின் அறிகுறிகளும், சிகிச்சைகளும்
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவருக்கு, மலம் வெளிர் நிறத்திலும், சிறுநீர் கருமையான நிறத்திலும் இருக்கும். அதுவே வெளிப்படையாக தெரியக்கூடிய முதல் அறிகுறி. அதனுடன், மேற்கூறிய நிற மாற்றங்களும் அடங்கும். கூடவே காய்ச்சல், சோர்வு, வாந்தி, எடை இழப்பு மற்றும் வயிற்று வலி ஆகியவையும் தோன்றலாம். மஞ்சள் காமாலை அதிகரிக்கும் போது, இரைப்பை, குடல் பிரச்சினைகள் மற்றும் மூளை பாதிப்புக்கு வழிவகுக்கும். மஞ்சள் காமாலை பொதுவாக, பெரியவர்களை விட குழந்தைகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. உடனடி சிகிச்சையாக மருத்துவர்கள், பிலிரூபினை கட்டுப்படுத்தும் போட்டோதெரபி (Phototherapy) சிகிச்சை முறையை பயன்படுத்துவர். குழந்தைகளுக்கு குறிப்பாக, சத்தான உணவுகளை வழங்க பரிந்துரைப்பர்.