பாத்திரம் கழுவும் ஸ்பாஞ்ச் பயன்படுத்துகிறீர்களா? ஒவ்வொரு முறையும் வெளியாகும் மைக்ரோபிளாஸ்டிக்
செய்தி முன்னோட்டம்
நாம் அன்றாடம் சமையலறையில் பாத்திரங்களைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் சாதாரண ஸ்பாஞ்ச்கள், ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் மிக நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களை வெளியிடுகின்றன என்ற அதிர்ச்சித் தகவல் புதிய ஆய்வு ஒன்றின் மூலம் வெளிவந்துள்ளது. ஜெர்மனியின் பான் பல்கலைக்கழகம் (University of Bonn), லைடன் பல்கலைக்கழகம் மற்றும் பிரான்ஹோஃபர் இன்ஸ்டிடியூட் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நடத்திய புதிய ஆய்வில் இத்தகவல் கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வு
SpongeBot ஆய்வில் வெளியான மைக்ரோபிளாஸ்டிக் ரகசியம்
சாதாரண வீட்டு உபயோகத்தின் போது ஸ்பாஞ்ச்கள் எந்த அளவிற்குத் தேய்மானம் அடைகின்றன மற்றும் அவற்றால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் என்ன என்பது குறித்து இந்த ஆராய்ச்சிக்குழு விரிவாக ஆய்வு செய்தது. இதற்காக பல வீடுகளில் நிஜ வாழ்க்கைச் சோதனைகள் நடத்தப்பட்டன. மேலும், ஆய்வகத்தில் 'ஸ்பாஞ்ச்பாட்' என்ற கருவியைப் பயன்படுத்தி, பாத்திரம் கழுவும் போது ஏற்படும் அழுத்தம் மற்றும் உராய்வு ஆகியவை செயற்கையாக உருவாக்கப்பட்டுச் சோதிக்கப்பட்டன. இந்த ஆய்வின் முடிவில், அதிகப்படியான பிளாஸ்டிக் உள்ளடக்கம் கொண்ட ஸ்பாஞ்ச்கள் மிக வேகமாகக் குன்றி, அதிக மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை வெளியேற்றுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நபர் மூலமாக மட்டும் வருடத்திற்குச் சராசரியாக 0.68 கிராம் முதல் 4.21 கிராம் வரையிலான மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் வெளியேறுகின்றன.
ஆபத்து
மைக்ரோபிளாஸ்டிக்கை விடப் பெரிய ஆபத்து: தண்ணீர் நுகர்வு
ஜெர்மனி போன்ற ஒரு நாட்டில் மட்டும் இதன் காரணமாக ஆண்டுக்கு 355 டன் மைக்ரோபிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன. இவை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாண்டியும் ஆறுகள், ஏரிகள் மற்றும் கடல்களில் கலந்து நிலத்தையும் நீரையும் மாசுபடுத்துகின்றன. இருப்பினும், இந்த ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் மற்றொரு முக்கிய உண்மையையும் கண்டறிந்துள்ளனர். பாத்திரங்களைக் கைகளால் கழுவும் போது ஏற்படும் ஒட்டுமொத்தச் சுற்றுச்சூழல் பாதிப்பில், மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாட்டை விடத் தண்ணீரை அதிகமாக வீணாக்குவதே மிக முக்கியக் காரணியாக உருவெடுத்துள்ளது. பாத்திரம் கழுவுவதால் ஏற்படும் ஒட்டுமொத்தச் சுற்றுப்புறச் சூழல் சேதத்தில் சுமார் 85% முதல் 97% வரையிலான பாதிப்பு, நாம் பயன்படுத்தும் அதிகப்படியான தண்ணீர் நுகர்வினால் மட்டுமே ஏற்படுகிறது என்று இந்த ஆய்வு எச்சரிக்கிறது.
தற்காப்பு
பாதிப்பை குறைக்க ஆராய்ச்சியாளர்கள் கூறும் எளிய வழிகள்
சமையலறை ஸ்பாஞ்ச்களால் ஏற்படும் இந்த இரட்டைச் சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்க ஆராய்ச்சியாளர்கள் சில எளிய வழிமுறைகளை பரிந்துரைத்துள்ளனர். சந்தையில் வாங்கும் போது குறைந்த பிளாஸ்டிக் அளவு கொண்ட அல்லது இயற்கை நார் கொண்டு தயாரிக்கப்பட்ட ஸ்பாஞ்ச்களை தேர்வு செய்து பயன்படுத்தலாம். ஒரு ஸ்பாஞ்சை மிக விரைவாகத் தூக்கி எறியாமல், அதன் தரத்தை பொறுத்து சற்று கூடுதல் நாட்களுக்குப் பயன்படுத்தலாம். பாத்திரங்களை கழுவும் போது குழாய்களை திறந்து வைக்காமல், தேவையான அளவு தண்ணீரை மட்டும் சிக்கனமாக பயன்படுத்த பழக வேண்டும்.