LOADING...
பீட்சா, பர்கர் சாப்பிடுவது சிகரெட் பிடிப்பதற்கு சமமா? அதிர்ச்சியை ஏற்படுத்தும் புதிய ஆய்வு; கடுமையான சட்டங்களுக்குப் பரிந்துரை
ஜங்க் உணவுகள் சிகரெட்டுகளைப் போன்ற ஆபத்தானவை என புதிய ஆய்வில் எச்சரிக்கை

பீட்சா, பர்கர் சாப்பிடுவது சிகரெட் பிடிப்பதற்கு சமமா? அதிர்ச்சியை ஏற்படுத்தும் புதிய ஆய்வு; கடுமையான சட்டங்களுக்குப் பரிந்துரை

எழுதியவர் Sekar Chinnappan
Feb 07, 2026
06:05 pm

செய்தி முன்னோட்டம்

அதிநவீன முறையில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் (Ultra-processed foods - UPFs) பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு சிகரெட்டுகளைப் போலவே பெரும் தீங்குகளை விளைவிப்பதாக ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நடத்திய புதிய ஆய்வில் எச்சரித்துள்ளனர். பிப்ரவரி 3, 2026 அன்று தி மில்பேங்க் குவார்ட்டர்லி (The Milbank Quarterly) இதழில் வெளியான இந்த ஆய்வின்படி, ஜங்க் உணவுகள் மனித மூளையில் ஏற்படுத்தும் தாக்கம் புகையிலை ஏற்படுத்தக்கூடிய அடிமைத்தனத்திற்கு இணையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, புகையிலை தயாரிப்புகளுக்கு விதிக்கப்படுவதைப் போன்ற கடுமையான கட்டுப்பாடுகளை இந்த உணவுகளுக்கும் விதிக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடிமை

அடிமைப்படுத்தும் தொழில்நுட்பம்

ஜங்க் உணவுகள் சாதாரணமாகத் தயாரிக்கப்படுவதில்லை, மாறாக அவை மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும் வகையில் தொழில்நுட்ப ரீதியாக வடிவமைக்கப்படுகின்றன. சிகரெட்டில் உள்ள நிகோடின் எப்படி மூளையின் ரிவார்டு பாத்வே எனப்படும் மகிழ்ச்சி உணர்வைத் தூண்டுகிறதோ, அதேபோல இந்த உணவுகளில் உள்ள செயற்கை சுவையூட்டிகள், சர்க்கரை மற்றும் கொழுப்பு ஆகியவற்றின் துல்லியமான கலவை மனிதர்களை அதற்கு அடிமையாக்குகிறது. பலர் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட்ட பிறகு, அதற்கு மாற்றாக இனிப்புப் பண்டங்கள் மற்றும் குளிர்பானங்களுக்கு அடிமையாவதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

விளம்பரங்கள்

தவறான விளம்பரங்களும் ஹெல்த் வாஷிங் முறையும்

நிறுவனங்கள் தங்களது ஜங்க் உணவுகளை குறைந்த கொழுப்பு அல்லது சர்க்கரை இல்லாதது என்று விளம்பரப்படுத்துவதை இந்த ஆய்வு கடுமையாக விமர்சித்துள்ளது. 1950 களில் சிகரெட் நிறுவனங்கள் ஃபில்டர் பொருத்தப்பட்ட சிகரெட்டுகள் பாதுகாப்பானவை என்று விளம்பரப்படுத்திய அதே உத்தியைத்தான் தற்போதைய உணவு நிறுவனங்களும் பின்பற்றுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இத்தகைய ஹெல்த் வாஷிங் (Health-washing) முறைகள் நுகர்வோரை ஏமாற்றி, ஆரோக்கியமற்ற உணவுகளை ஆரோக்கியமானது என்று நம்ப வைக்கின்றன.

Advertisement

சட்டங்கள்

கடுமையான சட்டங்களின் அவசியம்

புகையிலைக் கட்டுப்பாட்டிற்காக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள் மற்றும் விளம்பரக் கட்டுப்பாடுகளை ஜங்க் உணவுகளுக்கும் அமல்படுத்த வேண்டும் என்று இந்த ஆய்வு வலியுறுத்துகிறது. குறிப்பாகச் சிறுவர்களைக் குறிவைத்துச் செய்யப்படும் விளம்பரங்களைத் தடை செய்வது, அதிக வரி விதிப்பது மற்றும் பள்ளிகளுக்கு அருகில் இத்தகைய உணவுகள் கிடைப்பதைக் கட்டுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் உடனடியாகத் தேவைப்படுகின்றன. ஜங்க் உணவுகளால் ஏற்படும் உடல் பருமன், நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் உலகளாவிய சுகாதார அமைப்புகளுக்குப் பெரும் சுமையாக மாறி வருவதால், தனிப்பட்ட பொறுப்பைத் தாண்டி நிறுவனங்களின் பொறுப்புணர்வை உறுதி செய்ய வேண்டும் என ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Advertisement