Loading...
புற்றுநோய்க்கு எதிரான புதிய புரட்சி; செல்களை தானாகவே அழிய வைக்கும் தொழில்நுட்பம் ஜப்பானில் கண்டுபிடிப்பு
புற்றுநோய் செல்களை தானாகவே அழிய வைக்கும் தொழில்நுட்பம் ஜப்பானில் கண்டுபிடிப்பு

புற்றுநோய்க்கு எதிரான புதிய புரட்சி; செல்களை தானாகவே அழிய வைக்கும் தொழில்நுட்பம் ஜப்பானில் கண்டுபிடிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 25, 2026
07:41 pm

செய்தி முன்னோட்டம்

புற்றுநோய் செல்களை தானாகவே அழித்துக் கொள்ள வைக்கும் ஒரு புதிய சோதனை கட்ட வேதியியல் தொழில்நுட்பத்தை ஜப்பான் நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். ஜப்பானின் புகழ்பெற்ற ரைக்கன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் டோக்கியோ அறிவியல் கழகத்தின் ஆய்வாளர்கள் இணைந்து இந்த மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகள் நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. வெளியில் இருந்து மருந்துகளை செலுத்துவதற்குப் பதிலாக, புற்றுநோய் செல்லின் சொந்த வேதியியல் அமைப்பைப் பயன்படுத்தி அதனை செல்லுக்குள்ளேயே அழிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

கார்பன் மோனாக்சைடு வாயு

கார்பன் மோனாக்சைடு வாயுவைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் மருந்து

மனித உடலில் சிறிய அளவில் இயற்கையாக உருவாகும் கார்பன் மோனாக்சைடு வாயு, புற்றுநோய் செல்களில் மிக அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதனை அடிப்படையாகக் கொண்டு விஞ்ஞானிகள் ஆல்புகமின்-பல்லேடியம் என்ற வேதியியல் கலவையை உருவாக்கியுள்ளனர்.

ரத்தத்தில் உள்ள ஆல்புகமின் புரதம் பல்லேடியம் வினையூக்கியை பாதுகாப்பாக செல்லுக்குள் எடுத்து செல்கிறது.

அங்குள்ள கார்பன் மோனாக்சைடை மூலப்பொருளாகப் பயன்படுத்தி, ஃபெனாந்த்ரிடினோன் என்ற புற்றுநோயை அழிக்கும் சக்திவாய்ந்த வேதிப்பொருளை செல்லுக்குள்ளேயே இது உற்பத்தி செய்கிறது.

சோதனை வெற்றி

கல்லீரல் மற்றும் மார்பகப் புற்றுநோய் செல்களில் சோதனை வெற்றி

ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் கல்லீரல், மார்பகம், நுரையீரல் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் செல்களில் விரும்பிய வேதியியல் மாற்றங்கள் வெற்றிகரமாக நிகழ்ந்துள்ளன.

இந்த தொழில்நுட்பம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கணிசமாகக் கட்டுப்படுத்தியதுடன், ஆரோக்கியமான ஃபைப்ரோபிளாஸ்ட் செல்களை அதிகம் பாதிக்காமல் புற்றுநோயை தேர்ந்தெடுத்துக் அழிக்கும் ஆற்றலைக் காட்டியுள்ளது.

இருப்பினும், சாதாரண செல்களுக்கும் புற்றுநோய் செல்களுக்கும் இடையிலான நச்சுத்தன்மை வேறுபாடு குறைவாகவே உள்ளது என்பதால் இது தொடக்கக்கட்ட சோதனையாகவே கருதப்படுகிறது.

ADVERTISEMENT

புற்றுநோய் சிகிச்சை

எதிர்கால புற்றுநோய் சிகிச்சையில் புதிய கதவுகளைத் திறக்கும் ஆய்வு

கீமோதெரபி சிகிச்சையில் ஆரோக்கியமான செல்களும் பாதிக்கப்படுவதால் பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன.

ஆனால், இந்த புதிய அணுகுமுறை புற்றுநோயின் பிரத்யேக வேதியியல் முத்திரையைப் பயன்படுத்தி அதே இடத்தில் மருந்தைத் தயாரிப்பதால் பக்கவிளைவுகளைக் குறைக்க முடியும்.

தற்போதைக்கு இத்தொழில்நுட்பம் மனித உடலிலோ அல்லது விலங்குகளிலோ நேரடியாக சோதிக்கப்படவில்லை என்பதால், மருத்துவப் பயன்பாட்டிற்கு வர இன்னும் பல ஆண்டுகள் கடினமான ஆய்வுகள் தேவைப்படும்.

எனினும், புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆராய்ச்சியில் இது மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT