வேக்யூம் கிளீனர் விரைவில் பழுதடைய போகிறதா? இந்த 5 அறிகுறிகள் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்!
செய்தி முன்னோட்டம்
வேக்யூம் கிளீனர் நமது வீட்டைத் தூய்மைப்படுத்தும் வேலையை மிகவும் எளிதாக்குகிறது. ஆனால், சில நேரங்களில் அது சரியாக வேலை செய்யாமல் போவதற்குக் காரணம் என்னவென்று நமக்குத் புரிவதில்லை. உங்களுடைய வேக்யூம் கிளீனருக்கு எப்போது பழுதுபார்ப்பு (Repair) தேவைப்படும் என்பதைக் காட்டும் சில முக்கியமான அறிகுறிகளைப் பற்றி இங்குப் பார்ப்போம். இந்த அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம், நீங்கள் சரியான நேரத்தில் அதன் சிக்கல்களைத் தெரிந்துகொண்டு சரி செய்ய முடியும்.
#1
வேக்யூம் கிளீனர் சரியாக உறிஞ்சாமல் போவது (Loss of Suction)
உங்களுடைய வேக்யூம் கிளீனர் தூசியைச் சரியாக உறிஞ்சவில்லை என்றால், அதில் ஏதோ குறைபாடு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். இதனால் சுத்தம் செய்யும் வேலை கடினமாவதுடன், தூசியும் முழுமையாக நீங்காது. இந்த உறிஞ்சும் திறன் குறைபாடு (Low suction) பொதுவாக அதன் காற்று வடிகட்டி (Filter) அல்லது உறிஞ்சும் குழாயில் (Hose) ஏதேனும் அடைப்பு இருந்தால் ஏற்படும். இதனைச் சரி செய்ய, முதலில் வேக்யூம் கிளீனரின் வடிகட்டியையும் குழாயையும் கவனமாகப் பரிசோதியுங்கள். அதில் ஏதேனும் குப்பைகள் அல்லது முடி சிக்கி அடைப்பு இருந்தால், அவற்றை உடனடியாகச் சுத்தம் செய்யுங்கள். வடிகட்டியில் அதிக தூசி படிந்திருந்தால் அதனைத் தட்டியோ அல்லது கழுவியோ மீண்டும் பொருத்துங்கள்.
#2
அதிகப்படியான சத்தம் வருவது (Excessive Noise)
வேக்யூம் கிளீனர் வழக்கத்தை விட விசித்திரமாகவோ அல்லது மிக அதிகமாகவோ சத்தம் எழுப்பினால், அதில் பழுது ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். காது கூசும் அளவுக்குச் சத்தம் வந்தால் உடனே அதை நிறுத்திவிட்டுப் பழுதுபார்க்க வேண்டும். இந்தத் தொந்தரவு பெரும்பாலும் அதன் மோட்டார் அல்லது விசிறி (Fan) பழுதடைந்திருந்தாலோ, அல்லது உள்ளே பெரிய குப்பைகள், நாணயங்கள் போன்ற பொருட்கள் சிக்கியிருந்தாலோ ஏற்படும். இதைச் சரி செய்ய, முதலில் வேக்யூம் கிளீனரை அணைத்துவிட்டு அதன் விசிறி மற்றும் மோட்டார் பகுதியைச் சோதித்துப் பாருங்கள். உள்ளே சிக்கியுள்ள குப்பைகளை நீக்கிய பின்பும் சத்தம் குறையவில்லை எனில், டெக்னீஷியனிடம் காண்பிப்பது நல்லது.
#3
மின்சாரம் அடிக்கடி நின்றுபோவது
வேக்யூம் கிளீனர் இயங்கும் போது பவர் தானாக நின்றுபோனால், அதில் பழுது ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். இது சுத்தம் செய்யும் வேலையைக் கெடுப்பதுடன் மோட்டாரையும் பாதிக்கும். இந்தத் தொந்தரவு பெரும்பாலும் மின்சார ஒயர், பிளக் பழுதடைந்திருந்தாலோ அல்லது உள்ளே அதிக தூசி சேர்ந்து மோட்டார் சூடாவதாலோ (Overheating) ஏற்படும். இதைச் சரி செய்ய, முதற்கட்டமாக ஒயர் மற்றும் பிளக்கைச் செக் செய்யுங்கள். பிறகு தூசி சேகரிக்கும் பையைச் சுத்தம் செய்துவிட்டுப் பயன்படுத்துங்கள்.
#4
புகை வருவது
வேக்யூம் கிளீனரில் இருந்து புகை வந்தால், ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் உடனே அதை அணைத்துவிட்டுப் பிளக்கை கழற்றிவிடுங்கள். புகை வருவது மோட்டார் முற்றிலும் பழுதடைந்துவிட்டதை அல்லது வயரிங்கில் பெரிய ஆபத்து உள்ளதைக் குறிக்கும் முக்கிய அறிகுறியாகும். இந்தத் தொந்தரவு பெரும்பாலும் பெல்ட் உருகியிருந்தாலோ, மோட்டார் அதிகப்படியாகச் சூடாகி கருகியிருந்தாலோ அல்லது உள்ளே மின் கசிவு (Short circuit) ஏற்பட்டிருந்தாலோ நிகழும். இதைச் சரி செய்ய, நீங்களாகப் பழுதுபார்க்க முயலாமல், உடனடியாக அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர் அல்லது டெக்னீஷியனிடம் கொண்டு சென்று மோட்டார் மற்றும் மின் இணைப்புகளைச் சோதித்து மாற்றுவதே பாதுகாப்பானது.
#5
துர்நாற்றம் வருவது
வேக்யூம் கிளீனரில் இருந்து கெட்ட வாடை வந்தால், அதில் பராமரிப்புத் தேவைப்படுகிறது என்று அர்த்தம். இது உள்ளே தூசி, குப்பைகள் அல்லது ஈரப்பதம் அதிகமாகச் சேர்ந்ததால் ஏற்படும். குறிப்பாக, தூசிப் பையை நீண்ட நாட்கள் மாற்றாமல் இருந்தாலோ அல்லது ஈரமான குப்பைகளை உறிஞ்சியிருந்தாலோ அதனுள் பூஞ்சை காளான் ஏற்பட்டுத் துர்நாற்றம் வீசும். இதைச் சரி செய்ய, தூசிப் பையைக் காலி செய்துவிட்டு, வடிகட்டியை (Filter) நன்றாகக் கழுவி, முற்றிலும் உலர வைத்த பின் பொருத்துங்கள். இந்த அறிகுறிகளைக் கவனிப்பதன் மூலம் வேக்யூம் கிளீனர் பழுதடைவதைத் தவிர்க்கலாம்.