பல பழங்களைக் கலந்து சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? கெட்டதா?
செய்தி முன்னோட்டம்
பழங்கள் நமது அன்றாட ஊட்டச்சத்துக்கு மிகவும் முக்கியமானவை. தினமும் நாம் சாப்பிடும் உணவில் குறிப்பிட்ட அளவில் பழங்கள் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. தற்போது ஒரே பழத்தை சாப்பிடுவதை தவிர்த்து, பல்வேறு பழங்களையும் பலந்து சாப்பிடும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. ஆப்பிள், திராட்சை, பேரிச்சை, அன்னாசி என அனைத்து விதமான பழங்களையும் சிறிய துண்டுகளாக நறுக்கி சாலட் போல சாப்பிடுகின்றனர். இப்படி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா எனவும் ஒரு பக்கம் கேள்விகள் எழுந்து வருகிறது. இது குறித்து மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் எனப் பார்க்கலாம்.
உடல்நலம்
மருத்துவர்கள் சொல்வது என்ன?
இப்படி பல்வேறு பழங்களையும் கலந்து ஒரே நேரத்தில் சாப்பிடுவதனால் பொதுவாக எந்தப் பிரச்சினையும் இல்லை என்றே மருத்துவர்கள் கூறுகிறார்கள். பழங்களில் இயற்கையாகவே சர்க்கரை இருக்கும். அதிக சர்க்கரை கொண்ட பழங்களை ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்வதனால் சென்சிட்டிவான செரிமான மண்டலம் கொண்டவர்களுக்கு லேசான வயிறு உப்புசம் ஏற்படலாம் எனவும் சில மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே எந்தெந்த பழங்களை கோர்வையாக சாப்பிடலாம் என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப எடுத்துக் கொண்டால் எந்தப் பிரச்சினையும் இருக்காது. குறிப்பாக அதிக சர்க்கரை கொண்ட பழங்களை ஒரே நேரத்தில் சாப்பிடுவதை தவிர்த்து விட்டாலே போதும்.
பழங்கள்
எந்தெந்த நேரங்களில் சாப்பிடலாம்?
பொதுவாக பழங்களை சாப்பிடுவதற்கென எந்தவொரு தனி நேரமும் கிடையாது. எனினும், காலை மற்றும் மாலை வேளைகளில் பழங்களை எடுத்துக் கொள்வது சிறந்தது என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். சர்க்கரை நிறைந்த டெஸர்ட்கள் மற்றும் பாலில் செய்த உணவுப் பொருட்களை சாப்பிட்ட பின்போ அல்லது மிகவும் ஹெவியான உணவு உண்ட பின்போ பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்கலாம். இது செரிமான கோளாறுக்கு வழிவகுக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. அந்தந்த காலநிலையில் கிடைக்கும் பழங்களை அந்தந்த காலங்களில் சாப்பிடலாம். சாறாக எடுத்துக் கொள்வதை விட முழு பழமாக சாப்பிடுவது கூடுதல் நன்மையைக் கொடுக்கும். சாப்பிடும் முன் பழங்களை கழுவி சுத்தம் செய்வது சிறப்பு.