இந்திய சுற்றுலா பயணிகள் விசா இல்லாமல் ஈரானுக்குள் நுழைய விதிக்கப்பட்டிருக்கும் 4 நிபந்தனைகள்
இந்திய சுற்றுலா பயணிகள் விசா இல்லாமல் ஈரானுக்குள் நுழைந்து 15 நாட்கள் வரை தங்கலாம் என்று ஈரான் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. நான்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு பிப்ரவரி 4 முதல் இந்திய குடிமக்கள் விசா இல்லாமல் ஈரானுக்குள் நுழையலாம் என்று ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம், இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, இந்தோனேசியா, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் மலேசியா உள்ளிட்ட 32 நாடுகளுக்கான விசா இல்லாத திட்டத்தை ஈரான் அங்கீகரித்தது. சாதாரண கடவுச்சீட்டை வைத்திருக்கும் நபர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை விசா இல்லாமல் ஈரானுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். அதிகபட்சமாக 15 நாட்கள் அவர்கள் தங்கலாம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
சுற்றுலா பயணிகள் மட்டுமே விசா இல்லாமல் ஈரானுக்குள் நுழைய முடியும்
"15 நாட்கள் கால அவகாசத்தை அதற்கு மேல் நீட்டிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. ஈரான் இஸ்லாமிய குடியரசின் எல்லைக்குள் சுற்றுலா நோக்கங்களுக்காக நுழையும் நபர்களுக்கு மட்டுமே இந்த விசா ரத்து பொருந்தும்." என்றும் ஈரான் கூறியுள்ளது. நீண்ட காலம் தங்க விரும்பும் இந்தியர்கள், ஆறு மாத காலத்திற்குள் பல நுழைவுகளைச் செய்ய விரும்பும் இந்தியர்கள் மற்றும் பிற வகையான விசாக்கள் தேவைப்படுபவர்கள் இந்தியாவில் உள்ள ஈரானிய தூதரகங்களிலிருந்து தேவையான விசாவைப் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. "இந்த விசா இல்லாத சலுகைகள் வான் எல்லை வழியாக நாட்டிற்குள் நுழையும் இந்திய குடிமக்களுக்கு பொருந்தும்" என்று ஈரான் கூறியுள்ளது.