ரத்த சோகை ஒழிப்பு: அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குப் பரிசோதனை அவசியம்; ICMR-NIN பரிந்துரை
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் பெண்கள் மற்றும் வளர்இளம் பருவச் சிறுமிகளிடையே ரத்த சோகை ஒரு பெரும் பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக நீடிக்கிறது. இதனைச் சமாளிக்க, நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குக் கட்டாயப் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் - தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (ICMR-NIN) வலியுறுத்தியுள்ளது. தெலுங்கானாவின் 14 கிராமங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், "Screen and Treat for Anaemia Reduction" (STAR) என்ற புதிய மாதிரித் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது.
விவரங்கள்
திட்டத்தின் விவரங்கள்
இந்தத் திட்டத்தின் கீழ் சுகாதாரப் பணியாளர்கள் வீடுகளுக்கே சென்று சிறிய ரத்தப் பரிசோதனை கருவிகள் மூலம் ஹீமோகுளோபின் அளவைச் சோதித்தனர். ரத்த சோகை உள்ளவர்களுக்குத் தேவையான இரும்புச்சத்து மற்றும் போலிக் அமில (IFA) மாத்திரைகள் உடனடியாக வழங்கப்பட்டன. ரத்த சோகை இல்லாதவர்களுக்குத் தடுப்பு மருந்தாக மாத்திரைகள் வழங்கப்பட்டன.
முடிவுகள்
ஆய்வின் முடிவுகள்
தற்போதுள்ள வழக்கமான அரசுத் திட்டங்களை விட இந்த 'ஸ்டார்' முறை அதிகப் பலன் தருவது கண்டறியப்பட்டுள்ளது. வளர்இளம் சிறுமிகள் (10-19 வயது): ரத்த சோகை பாதிப்பு 15.3% குறைந்துள்ளது. பெண்கள்: ரத்த சோகை பாதிப்பு 4.4% குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக ரத்த சோகை பாதிப்பு 32.5 சதவீதத்திலிருந்து 29.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.
தற்போதைய நிலை
தற்போதைய நிலையும் சவால்களும்
தேசியக் குடும்பச் சுகாதார ஆய்வின் (NFHS-5) படி, இந்தியாவில் 57% பெண்களும், 59.1% வளர்இளம் சிறுமிகளும் ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதுள்ள 'ரத்த சோகை இல்லாத இந்தியா' (Anemia Mukt Bharat) திட்டம் பெரும்பாலும் கர்ப்பிணிப் பெண்களையே அதிகம் கவனத்தில் கொள்கிறது. இருப்பினும், இந்த ஆய்வில் ஒரு சவாலும் கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் மாத்திரைகளைச் சரியாக உட்கொள்வதில்லை. சிகிச்சை பெறுபவர்களில் 32% பேரும், தடுப்பு மருந்தாக எடுப்பவர்களில் 47.5% பேரும் மட்டுமே மாத்திரைகளைத் தவறாமல் உட்கொள்கின்றனர். எனவே, முறையான ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு மூலம் இதனை மேம்படுத்தினால் மட்டுமே ரத்த சோகையை முழுமையாக ஒழிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.