
கடவுளுக்கு உகந்த மாவிளக்கு செய்வது எப்படி?
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் பல்வேறு கோயில்களிலும், பல்வேறு திருவிழாக்களிலும் மாவிளக்கு போடுவது என்பது மிகவும் விசேஷமான வழிபாடாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மாவிளக்கு போடுவதால் நிறைய நன்மைகள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மேலும், ஆடி மாதம் மாவிளக்கு போடுவது மழையை கொண்டு வரும் என நம்பும் வழக்கமும் பல்வேறு தரப்பினரிடமும் இருந்து வருகிறது. மகாலஷ்மி மற்றும் அம்மனுக்கு மாவிளக்கு போடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
அதேபோல், குலதெய்வத்தைக் கும்பிடுபவர்கள் மாவிளக்கு ஏற்றி வழிபடுவது காலம் காலமாக நடைமுறையில் இருந்து வரும் ஒரு விஷயம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாவிளக்கு ஏற்றி வழிபடுவதால் வீட்டில் லஷ்மி கடாச்சம் பெருகும் என்பது ஒரு நம்பிக்கை.
இத்தனை சிறப்புமிக்க மாவிளக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
மாவிளக்கு
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - கால் கிலோ
வெல்லம் - 100 கிராம்
ஏலக்காய் பொடி - கால் தேக்கரண்டி
சுக்குப்பொடி - கால் தேக்கரண்டி
பச்சை கற்பூரம் - சிறிதளவு
பச்சரிசி மாவு: செய்முறை
பச்சரிசி மாவு இருந்தால் அதனை நேரடியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லையென்றால், பச்சரிசியை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர், அதனை வெயிலேலோ அல்லது காற்றிலோ உலர்த்தி, அதனை மிக்ஸியில் இட்டு பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்தை மாவை சலித்து, குருணையாக வரும் அரிசியை மீண்டும் மிக்சியில் இட்டு நன்கு பொடியாக வரும் வரை அரைத்துக் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மாவிளக்கு
மாவிளக்கு: செய்முறை:
அரைத்து வைத்த பச்சரிசி மாவுடன், வெல்லத்தை ஒரு வாணலியில் போட்டு நன்கு பாகாகக் காய்ச்சி சேர்க்க வேண்டும். அதன் பின், அதில் ஏலக்காய் பொடி, சுக்குப் பொடி மற்றும் பச்சைக் கற்பூரம் ஆகியவற்றைச் சேர்த்து சப்பாத்தி மாவை விட சற்று கெட்டியான பக்குவத்திற்குப் பிசைந்து கொள்ள வேண்டும்.
மாவுப் பக்குவத்திற்குப் பிசைந்த பிறகு, சிறிதளவு நெய் சேர்த்து உருண்டை பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த உருண்டையை தட்டையாகச் செய்து, அதனை நடுவில் அழுத்தி விளக்கு போன்ற வடிவத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.
அவ்வளவு தான் மாவிளக்கு ரெடி, இதில் எண்ணெய்யோ அல்லது நெய்யோ இட்டு கடவுளிடம் வழிபடலாம். எப்போதும் ஒற்றை மாவிளக்கு போடக்கூடாது என்பதை மட்டும் மனதில் கொள்ளுங்கள்.