உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அதிக கொலஸ்ட்ரால்
கொலஸ்ட்ரால் என்பது உடலிலுள்ள செல்களில் காணப்படும் ஒருவித மெழுகு போன்ற பொருள் ஆகும். இயற்கையாகவே உடலில் இருந்தாலும், இறைச்சி மற்றும் பால் போன்ற உணவு பொருட்களிலும் இது உள்ளது. எனவே, இந்த கொழுப்பு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. இருப்பினும், சர்க்கரை, ரத்த அழுத்தம் போல, கொலஸ்ட்ரால் அளவும் சரியாக இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமான கொழுப்பு உடலில் சேரும்போது அது தீவிரமான பாதிப்புகளை உருவாக்குகிறது. கொலஸ்டிரால் அதிகமாகும் போது எந்த விதமான அறிகுறிகளையும் வெளிப்படுத்துவதில்லை. அளவுக்கு அதிகமான கொலஸ்ட்ரால் இரத்த நாளங்களில் கொழுப்புப் படிமங்களை உருவாக்குகின்றது. இது நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி, இரத்த ஓட்டத்தை தடை செய்கிறது. ரத்த ஓட்டம் தடை படும்போது, மாரடைப்பை ஏற்படுத்தலாம்.
அதிக கொலஸ்ட்ரால் எவ்வாறு ஏற்படுகிறது? அதனை தடுக்கும் வழிமுறைகள்
எல்லா கொலஸ்ட்ராலும் உடலுக்கு தீங்கு விளைவிக்காது. HDL கொழுப்புகள் உடலுக்கு நன்மையை தருகின்றன. உணவுமுறை, வாழ்க்கை முறை, மரபியல் மற்றும் புகைபிடித்தல் போன்றவை அதிக கொலஸ்ட்ராலை உண்டாக்கும் காரணங்களாக இருக்கின்றன. குறைந்த கலோரி மற்றும் குறைந்த கொழுப்புகளை கொண்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கலாம். மேலும் காய்கறிகள், பழங்கள் மற்றும் முழு தானியங்களை உணவுகளில் அதிகம் சேர்த்து கொள்ளுங்கள். மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ள வெண்ணெய், கொட்டைகள் , மீன் எண்ணெய் போன்றவற்றை உண்ணலாம். கெட்ட கொழுப்புகளான டிரான்ஸ் கொழுப்புகள் நிறைந்துள்ள பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்திடுங்கள். உங்களுக்கு ஏற்ற சிறந்த உடற்பயிற்சிகளை கண்டறிந்து அதனை தினமும் செய்யுங்கள்.