வீகன் டயட் உணவு முறைகளால் கிடைக்கும் நன்மைகள்
வீகன் டயட் என்பது முழுக்க முழுக்க தாவரங்களை மட்டுமே பயன்படுத்தும் அதிதீவிரமான ஓர் சைவ உணவு முறையாகும். அதாவது இறைச்சி மற்றும் பிற விலங்குகளில் இருந்து பெறப்படும், பால், தயிர், மோர், நெய் வெண்ணெய், பாலடைக் கட்டி, பன்னீர் மற்றும் தேன் போன்ற அனைத்து உணவுகளையும் தவிர்த்து, தாவரங்களிருந்து பெறப்படும் காய்கறிகள், பழங்கள், கீரைகள், தானியங்கள், பயறுவகைகள், பருப்பு வகைகள், உலர் பழங்கள் மட்டும் உண்ணும் ஒரு உணவு பழக்கமாகும். சமீபத்திய காலத்தின் இந்த உணவு பழக்கமுறை மிகவும் பிரபலமாகி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்த உணவுமுறை பின்பற்றுவோரின் எண்ணிக்கை பல நூறு சதவீதம் அதிகமாகி உள்ளதாக ஓர் அறிக்கை கூறுகிறது.
உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் 'வீகன்' உணவு முறை
இந்த உணவுமுறை உடல் எடையை குறைக்கிறது. இதய கோளாறு, சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றை சரி செய்கிறது. இது இரத்தத்தில் அதிக கொழுப்பு வரவிடாமல் தடுக்கிறது. இறைச்சி மற்றும் பாலிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துகளுக்கு சமமான மாற்று உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதே இவர்களின் அறிவுரை. உதாரணமாக பாலுக்கு பதிலாக தேங்காய் பால்,பாதாம்பால், சோயா பால் உபயோகிக்கலாம். டீக்கு பதிலாக க்ரீன் டீ, மூலிகை டீ போன்றவற்றை அருந்தலாம். ஆனால் குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் இதை பரிந்துரைப்பதில்லை. இறைச்சி மற்றும் பால் பொருட்களை அறவே தவிர்ப்பது நல்லதுதானா என்ற சந்தேகம் பலருக்கு ஏற்படுவது நியாயம் தான். இந்த உணவுமுறை உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது என பல மருத்துவ ஆராய்ச்சிகள் கூறிகின்றனவாம்.