
அடிக்கடி அலாரத்தை ஸ்னூஸ் செய்துவிட்டு தூங்குபவரா நீங்கள்? இனி அப்படி செய்யாதீங்க
செய்தி முன்னோட்டம்
உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் தூக்கத்தின்போது தங்கள் அலாரம் கடிகாரங்களில் உள்ள ஸ்னூஸ் (Snooze) பட்டனை அழுத்த தவறுவதில்லை. ஆனால், தூக்க நிபுணர்கள் இந்தப் பழக்கம் நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாக எச்சரிக்கின்றனர். கடந்த மே 19 அன்று சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு, சுமார் 45% பேர் தங்கள் காலை நேரங்களில் 80% க்கும் அதிகமான நேரங்களில் ஸ்னூஸ் செயல்பாட்டைப் பயன்படுத்துகிறார்கள் என்று தெரிவித்துள்ளது. மேலும், சராசரியாக ஒரு நாளைக்கு ஸ்னூஸ் செய்து 20 நிமிடங்கள் உறக்கநிலையில் உள்ளனர் என்பதை வெளிப்படுத்தி உள்ளது.
ஆய்வு
ஆய்வு விபரம்
பாஸ்டனில் உள்ள பிரிகாம் மற்றும் மகளிர் மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, ஆறு மாதங்கள் மற்றும் மூன்று மில்லியனுக்கும் அதிகமான தூக்க அமர்வுகளில் ஸ்லீப்சைக்கிள் ஆப்பைப் பயன்படுத்தும் 21,000 க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து தூக்கத் தரவை பகுப்பாய்வு செய்தது. பதிவுசெய்யப்பட்ட இரவுகளில் 56% இரவுகளில் ஸ்னூஸ் பட்டன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை பயன்படுத்திய அதிக பயனர்கள் அதிக ஒழுங்கற்ற தூக்கத்தைக் கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது. முன்னணி ஆராய்ச்சியாளர் ரெபேக்கா ராபின்ஸ், ஸ்னூஸ் அலாரம் முக்கியமான விரைவான கண் இயக்க (REM) தூக்கத்தை குறுக்கிடுகிறது என்றார். இந்த REM பொதுவாக இயற்கையான விழிப்புக்கு முந்தைய மணிநேரங்களில் நிகழ்கிறது என்பதால், ஸ்னூஸ் அலாரம் அந்த செயல்பாட்டை சிக்கலாக்குகிறது.
குறைவான தூக்கம்
ஸ்னூஸ் பயன்படுத்தாதவர்களிடம் குறைவான தூக்கம்
"ஸ்னூஸ் அலாரம் அடிப்பது தூக்கத்தின் இந்த முக்கியமான கட்டங்களுக்கு இடையூறு விளைவிக்கும், மேலும் பொதுவாக ஸ்னூஸ் அலாரங்களுக்கு இடையில் உங்களுக்கு லேசான தூக்கத்தை மட்டுமே வழங்கும்" என்று ராபின்ஸ் விளக்கினார். ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக தூங்குபவர்களிடையே ஸ்னூஸ் அலார பயன்பாடு அதிகமாகவும், ஐந்து மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாக தூங்குபவர்களிடையே மிகக் குறைவாகவும் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்கா, ஸ்வீடன் மற்றும் ஜெர்மனியில் ஸ்னூஸ் அலார பயன்பாடு அதிகமாக உள்ளது, அதே நேரத்தில் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா மிகக் குறைந்த பயன்பாட்டைப் பதிவு செய்தன. சிறந்த ஓய்வு மற்றும் தினசரி செயல்திறனை மேம்படுத்த வேண்டுமென்றால், தேவையான நேரத்திற்கு அலாரம் அமைத்து, ஸ்னூஸ் செய்யாமல் உடனடியாக எழுந்திருக்க ராபின்ஸ் அறிவுறுத்துகிறார்.