LOADING...
இனி சும்மா சொல்ல முடியாது! உணவுப் பொருட்களுக்கு அறிவியல் ஆதாரம் கட்டாயம்; FSSAI அதிரடி உத்தரவு
உணவுப் பொருட்களுக்கு அறிவியல் ஆதாரம் கட்டாயம் என FSSAI உத்தரவு

இனி சும்மா சொல்ல முடியாது! உணவுப் பொருட்களுக்கு அறிவியல் ஆதாரம் கட்டாயம்; FSSAI அதிரடி உத்தரவு

எழுதியவர் Sekar Chinnappan
Jan 02, 2026
06:30 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), உணவுப் பொருட்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் குறித்த போலியான விளம்பரங்களைத் தடுக்க புதிய விதிகளைக் கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றங்கள் ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ளன. இனிமேல் உணவு தயாரிப்பு நிறுவனங்கள், புதிய தயாரிப்புகளுக்கு அனுமதி கோரும்போது அல்லது ஏற்கனவே உள்ள தயாரிப்புகளை மறுஆய்வு செய்யும்போது, அவை குறித்த விரிவான அறிவியல் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். நிறுவனங்கள் அளிக்கும் இந்த அறிவியல் தரவுகள் ரகசியமாக வைக்கப்படும், பொதுவெளியில் பகிரப்படாது என FSSAI உறுதி அளித்துள்ளது. ஒரு பொருள் பாதுகாப்பானது என்பதை நிரூபிக்கும் முழுப் பொறுப்பும் அந்த நிறுவனத்தையே சாரும். முன்னதாக, குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு ஆணையமே பாதுகாப்பைக் கணிக்க வேண்டியிருந்தது.

விவரங்கள்

சமர்ப்பிக்க வேண்டிய விவரங்கள்

நிறுவனங்கள் பின்வரும் தகவல்களை விரிவாக வழங்க வேண்டும்: சத்துப்பொருள் விவரம்: தயாரிப்பில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவு. இந்திய உணவுப் பழக்கம்: வெளிநாட்டு ஆய்வுகளை மட்டும் நம்பாமல், இந்தியர்களின் உணவு முறை மற்றும் உட்கொள்ளும் அளவு குறித்த தரவுகள். நச்சுத்தன்மை ஆய்வு: தயாரிப்பால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா என்பது குறித்த ஆய்வு. ஒவ்வாமை மதிப்பீடு: அலர்ஜி ஏற்படுத்தும் வாய்ப்புகள் குறித்த தகவல்.

நன்மைகள்

நுகர்வோருக்குக் கிடைக்கும் நன்மைகள்

இந்தக் கடுமையான நடைமுறைகள் மூலம்: போலி விளம்பரங்கள் குறையும்: "ஆரோக்கியமானது" என்று ஆதாரமின்றி விளம்பரம் செய்வது தடுக்கப்படும். பாதுகாப்பு உறுதி: இந்தியர்களின் உடல்நிலை மற்றும் உணவுப் பழக்கத்திற்கு ஏற்ப பொருட்கள் ஆய்வு செய்யப்படுவதால் பாதுகாப்பு கூடும். ஒவ்வாமை தவிர்ப்பு: ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்கள் பற்றிய தெளிவான தகவல்கள் கிடைக்கும். நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்களை நிபுணர் குழுக்கள் ஆய்வு செய்து, அதன் பிறகே அந்தப் பொருட்களைச் சந்தைப்படுத்த அனுமதி அளிக்கப்படும்.

Advertisement