மருத்துவம்: வெர்டிகோ என்றால் என்ன? அவற்றின் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள்
வெர்டிகோ என்பது சாதாரணமாக நிகழும் மயக்கமோ, தலை சுற்றலோ அல்ல. வெர்டிகோவினால் பாதிக்கப்பட்ட ஒருவர், நிலையான இடத்தில இருந்தாலும், தானும், அந்த இடமும் வேகமாக சுழலுவதை போல உணருவார்கள். கிட்டத்தட்ட, வேகமாக சுழலும் ஒரு ராட்டினத்தில் இருந்து இறக்கி விட்டதை போன்ற உணர்வில் இருப்பார்கள். இந்த வெர்டிகோ பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் இதோ: வெர்டிகோ என்பது ஒரு நோய் அல்ல, அது பல நோய்களின் அறிகுறி என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். வெர்டிகோ இரு வகைப்படும்- பெரிஃபெரல் வெர்டிகோ மற்றும் சென்ட்ரல் வெர்டிகோ. பெரிஃபெரல் வெர்டிகோ என்பது காதில் உட்பகுதியில் ஏற்படும் ஒரு பிரச்சனை. சென்ட்ரல் வெர்டிகோ என்பது, மூளையில் ஏற்படும் பிரச்சனை.
ஸ்திரத்தன்மையை பாதிக்கும் வெர்டிகோ
மருந்து ஒவ்வாமை, உட்காதில் ஏற்படும் பிரச்சனையால் இந்த வெர்டிகோ ஏற்படலாம். வெஸ்டிபுலர் நரம்பில் ஏற்படக்கூடிய வீக்கத்தினாலோ அல்லது உயர் அழுத்தத்தினாலோ, இந்த பிரச்சனை ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அல்லது, தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தின் காரணமாக,மூளையில் பாதிப்பு ஏற்பட்டால் கூட இவ்வகை பாதிப்பு ஏற்படும். பார்வைக் கோளாறுகள், தலைச்சுற்றல், காதுகளில் சத்தம் போன்றவை வெர்டிகோவின் ஆரம்பகட்ட அறிகுறிகள் ஆகும். சரியான நேரத்தில் கவனிக்காமல் விட்டால், வெர்டிகோ உள்ளவர்கள் கண் பார்வை, கேட்கும் திறன் போன்ற பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். ஸ்திரத்தன்மையும் இழக்க நேரிடும். இதற்கென மருத்துவர்கள் தரும் மருந்துகளை உட்கொண்டால், முன்னேற்றம் ஏற்படும். மூளைக் கட்டி அல்லது கழுத்து காயம் காரணமாக வெர்டிகோ ஏற்பட்டால், அறுவை சிகிச்சை அவசியமாகிறது.