LOADING...
போபாலில் நிலத்தடி நீரில் ஆபத்தான 'இ-கோலை' பாக்டீரியா! உங்கள் குடிநீர் பாதுகாப்பானதா? தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் இதோ!
இ-கோலை பாக்டீரியா அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டி

போபாலில் நிலத்தடி நீரில் ஆபத்தான 'இ-கோலை' பாக்டீரியா! உங்கள் குடிநீர் பாதுகாப்பானதா? தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் இதோ!

எழுதியவர் Sekar Chinnappan
Jan 10, 2026
02:01 pm

செய்தி முன்னோட்டம்

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள நிலத்தடி நீரில் மனிதக் கழிவுகளால் உருவாகும் ஆபத்தான இ-கோலை (E. coli) பாக்டீரியா கலந்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், குடிநீராகப் பயன்படுத்தப்படும் நிலத்தடி நீர் சுகாதாரமற்ற நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சுகாதாரத் துறை விழிப்புணர்வு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. எஸ்கெரிச்சியா கோலை எனும் இ-கோலை என்பது மனிதர்கள் மற்றும் விலங்குகளின் குடலில் பொதுவாகக் காணப்படும் ஒரு வகை பாக்டீரியா ஆகும். இதில் பெரும்பாலானவை பாதிப்பில்லாதவை என்றாலும், சில குறிப்பிட்ட வகைகள் கடுமையான வயிற்றுப்போக்கு, சிறுநீரகப் பாதை தொற்று மற்றும் சுவாசக் கோளாறுகளை உண்டாக்கும்.

பாதிப்புகள்

அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள்

குறிப்பாக, நிலத்தடி நீரில் கழிவுநீர் கலக்கும்போது இத்தகைய பாக்டீரியாக்களின் தாக்கம் அதிகரிக்கிறது. இ-கோலை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீவிரமான வயிற்று வலி, ரத்தத்துடன் கூடிய வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் லேசான காய்ச்சல் ஆகியவை பொதுவான அறிகுறிகளாகும். தொற்று ஏற்பட்ட 3 முதல் 4 நாட்களில் அறிகுறிகள் தென்படத் தொடங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இது சிறுநீரக செயலிழப்பு போன்ற தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.

முன்னெச்சரிக்கை

தடுப்பு முறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை

நீரைக் கொதிக்க வைத்தல்: நிலத்தடி நீரை நேரடியாகக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து ஆறவைத்து பருகுவது பாக்டீரியாக்களை அழிக்கச் சிறந்த வழியாகும். நீர் சுத்திகரிப்பு: தரமான வாட்டர் ஃபில்டர்கள் (RO/UV) பயன்படுத்துவதை உறுதி செய்யவும். சுகாதாரம்: உணவு சமைப்பதற்கு முன்னும், கழிவறையைப் பயன்படுத்திய பிறகும் கைகளைச் சோப்பு போட்டுத் தேய்த்துக் கழுவ வேண்டும். கழிவுநீர் மேலாண்மை: கிணறுகள் மற்றும் போர்வெல்களுக்கு அருகில் கழிவுநீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். நிலத்தடி நீர் மாசுபடுவது உலகளாவிய சுகாதார அச்சுறுத்தலாக மாறி வரும் நிலையில், போபால் சம்பவத்தை ஒரு எச்சரிக்கையாகக் கொண்டு மற்ற இடங்களிலும் குடிநீர் ஆதாரங்களை அவ்வப்போது பரிசோதனை செய்வது அவசியமாகும்.

Advertisement