இதென்ன ஆச்சரியம்! கொண்டாடும் நாட்களில் கூட ஒரு உணவுச்சங்கிலி இணைப்பு வருகிறதே!
உங்களுக்கு தெரியுமா? இன்று (மார்ச் 20) உலக சிட்டுக்குருவிகள் தினம். ஊர் முழுக்க பறந்து பறந்து படித்திருந்த இந்த அழகிய பறவை, அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளதை அடுத்து, அதை பாதுகாக்கும் நோக்கோடு, இந்த நாளை உலகமெங்கும் பறவை மற்றும் இயற்கை ஆர்வலர்கள் அனுசரிக்கின்றனர். இதில் ஆச்சரியம் தரும் விஷயம் என்னவென்றால், இதை தொடர்ந்து கொண்டாடப்படும் அடுத்த 2 நாட்களுக்கும், சிட்டுக்குருவிக்கும் சம்மந்தம் உண்டு! ஆம், ஒரு உணவு சங்கிலி தொடர் போல, நாளை, (மார்ச் 21), வனஉயிரினங்கள் தினமாகவும், அதை தொடர்ந்து அடுத்த நாள் (மார்ச் 22) தண்ணீர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இது எதேச்சையாக அமைந்ததா அல்லது திட்டமிட்டு அனுசரிக்கப்படுகிறதா என்பது குறித்து இன்னும் தெளிவான விடை கிடைக்கவில்லை.
சர்வதேச சிட்டுக்குருவிகள் தினம்
சுதந்திரத்தின், அடையாளமாக பேசப்பட்ட சிட்டுக்குருவிகள், கடந்த 20 ஆண்டுகளாக, அழிவு நிலையை சந்தித்து வருகிறது. முன்காலங்களில், வீடுகளில், மரங்களில் என எங்கும் கூவி, கூவி பறந்த சிட்டுக்குருவிகள், தற்போது தேடினாலும் கிடைப்பது,அரிதினும் அரிதாகிவிட்டது. அதிலும், நகரத்தில் குருவிகளே இல்லை எனலாம். நகரத்தில் அதிகரித்துள்ள செல்போன் டவர்களும், அதில் இருந்து வெளி வரும் கதிர்வீச்சுகளும் தான் சிட்டுக்குருவிகளின் அழிவிற்கு காரணமாக கூறப்பட்டாலும், அதற்குரிய ஆதாரமாக எதுவும் இன்னும் சமர்பிக்கப்படவில்லை. இந்நாளில், சிட்டுக்குருவிகளை பாதுகாப்பது மட்டுமின்றி, அழிவு நிலையில் இருக்கும் மற்ற பறவை இனங்களையும் காப்போம் என சபதம் எடுப்போம். ஏனெனில், உணவு சங்கிலியில், முக்கியமான பறவைகள் அழிந்து விட்டால், மனித இனமும் விரைவில் அழிவு பாதையில் செல்லும் என்பது தான் நிதர்சனம்.