மஹாபாரத காலம் முதல் தற்போது வரை பிரபலமாக இருக்கும் சில உணவுகள் என்ன தெரியுமா?
தற்போது இருக்கும் பல விளை பொருட்கள் ஏதும் பண்டைய காலத்தில் இருந்ததில்லை. அதேபோல, அப்போதிருந்த பல விளை பொருட்கள், பாரம்பரிய உணவு வகைகள் தற்போது இல்லை. குறிப்பாக இதிகாச காலங்களில், மஹாபாரத நாயகர்கள் உண்டு ரசித்த பல உணவுகள் நமக்கு ருசிக்கும் வாய்ப்பு இல்லை. இருப்பினும் ஒரு சில உணவு வகைகள் அப்போதிருந்து தற்போது வரை, நாம் ருசித்து வருகிறோம் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? அவை என்னென்ன உணவு வகைகள் என்பதை இதோ பட்டியலிட்டுளோம்.
பானி பூரி:
பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தபோது, திரௌபதி வீட்டிலிருக்கும் இருக்கும் உணவை பகிர்ந்து தரவேண்டிய கட்டாயத்தில் இருந்தார். சிறிதளவே கோதுமை மாவும், குறைந்த அளவில் உருளை கிழங்கு, வெங்காயம் போன்றவை இருந்துள்ளன. அந்த நேரத்தில் திரௌபதி கண்டுபிடித்த உணவு வகை தான் பானி பூரி என ஒரு சரித்திர கதை உண்டு. கூடவே, இனிப்பான புளி+ வெல்லம் சேர்த்த தண்ணீரும், மல்லிதழை, புதினா, இஞ்சி போன்றவற்றை சேர்த்து அரைத்த கார சட்னியும் சேர்த்து உண்ணப்படும் சாட் உணவு தான் பானி பூரி.
பாயசம்:
இந்த இனிப்பான உணவை, பிடிக்காது என கூறுபவர்கள் குறைவே. பால், சர்க்கரை அல்லது வெல்லம் கலந்து, அதனோடு நெயில் வறுத்த முந்திரி, உலர் திராட்சை மற்றும் அவல்/ ஜவ்வரிசி/ சேமியா என பல பொருட்கள் சேர்த்து செய்யப்படும் உணவு இது. ராஜபோக விருந்து உண்டாலும், இறுதியில், இனிப்பு சுவையுடன் முடிப்பதே நமது வழக்கம். அதனால், மதிய உணவிற்கு பல வீடுகளில் பாயசம் செய்வதுண்டு. குறிப்பாக பண்டிகை காலங்களில், இறைவனுக்கு அர்ப்பணிக்க இந்த பாயசத்தை செய்வதுண்டு. பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரருக்கு பிடித்தமான உணவு இந்த பாயசம் என கூறுகிறார்கள்.
அவியல்:
கேரளாவின் ஸ்பெஷல் உணவாக கருதப்படும் இந்த அவியலை, முதலில் கண்டுபிடித்தது பாண்டவர்களில் ஒருவரான பீமன் என கூறுவதுண்டு. விரத ராஜ்யத்தில், பாண்டவர்கள் மறைந்து வாழ்ந்த போது, அரசாங்க சமையல்காரராக பணி செய்தார் பீமன். அப்போது அந்த மன்னனை காண வந்திருந்த துருவச முனிவருக்கு, பீமன் செய்து தந்த உணவு தான் இந்த அவியல். கிடைத்த காய்களை வைத்து, தேங்காய் மற்றும் தயிர் கலந்து செய்து தந்தாராம் பீமன். பொதுவாக முன்கோபியாக அறியப்பட்ட துருவச முனி, இந்த அவியலின் ருசியில் மயங்கி, பீமனை வாழ்த்தினார் என புராண கதைகள் கூறுவதுண்டு.
பாதுஷா மற்றும் ஜாங்கிரி:
தற்போது நாம் ருசிக்கும் பாதுஷா மற்றும் ஜாங்கிரியின் சற்றே மாறுபட்ட உணவை மஹாராபாரத நாயகர்களும் உண்டுள்ளார்கள். 'சமவ்யா' என்ற அப்போது அழைக்கப்பட்ட பலகாரத்தில், கோதுமை, பால், சர்க்கரை, ஏலக்காய் போன்றவை கலந்து, நெய்யில் பொரித்து எடுக்கப்பட்டதாம். கல்யாண விருதில், ராஜ விருந்தில் இவ்வகை இனிப்பு பலகாரம் பரிமாறப்பட்டதாம். அதுவே சற்று மாறுபட்டு, தற்போது 'பாதுஷா' ஆனது. 'சஷ்க்குளி' என்ற பலகாரம் பற்றி பகவத்கீதையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரிசி அல்லது பார்லியை சர்க்கரை பாகில் கலந்து செய்யப்படும் உணவு என்றும், செவி மடல் போன்ற தோற்றம் உடையது என்றும் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாம். தற்போது, அரிசிக்கு பதிலாக, சிறிது மைதாவும் கலந்து செய்யப்படுகிறது தற்போதைய ஜாங்கிரியும், ஜிலேபியும்.