டீடாக்ஸ் டயட், ஆரோக்கியமான வாழ்க்கைக்கான சிறந்த உணவுமுறைப் பழக்கமா?
சமீப காலங்களில் டீடாக்ஸ் டயட்டைப் (Detox Diet) பற்றி யாராவது கூறக் கேட்டிருப்பீர்கள். உடல் நலத்தைப் பேணவோ அல்லது உடல் எடையைக் குறைக்கவோ, உங்களைக் கடந்து செல்லும் யாரேனும் ஒருவராவது இந்த டீடாக்ஸ் டயட்டைப் பற்றிப் பேசியிருப்பார்கள். இந்த டீடாக்ஸ் உணவு முறையானது, நமது முன்னோர்கள் வழிவழியாகக் கடைப்பிடித்தும் வந்தது என்றும், ஆனால், அதனை நாம் மறந்து வேறு உணவுப் பழக்கத்திற்கு மாறியிருக்கிறோம் என்ற கதைகளையும் டீடாக்ஸ் டயட்டை கடைப்பிடிப்பவர்கள் முன்வைக்கிறார்கள். நம் உடலில் உள்ள நச்சுத்தன்மை மற்றும் கழிவுகளை உணவின் மூலமே வெளியேற்றுவது தான் இந்த டீடாக்ஸ் டயட்டின் அடிப்படை நோக்கம். ஆனால், இந்த டீடாக்ஸ் டயட்டை எப்படி மேற்கொள்கிறார்கள், இது மருத்துவப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா? பார்க்கலாம்.
டீடாக்ஸ் டயட்டை என்றால் என்ன?
மேற்கூறிய வகையில் உடலில் உள்ள நச்சுத் தன்மையை உணவின் மூலமே வெளியேற்றுவது தான் டீடாக்ஸ் டயட் எனப்படுகிறது. இந்த உணவு முறையில் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த, பழங்கம் மற்றும் காய்கறிகளை முழுமையாக உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், டீடாக்ஸ் உணவுமுறையைப் பின்பற்றுபவர்கள் ஒரு நாளில் குறைந்தபட்சம் 2.5 லிட்டருக்கும் மேலாவது தண்ணீர் குடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள. இவற்றை மட்டும் எடுத்துக் கொள்வதன் மூலம், உடலில் தேங்கியிருக்கும் நச்சுத்தன்மை மற்றும் கழிவுகளானது, வியர்வை மற்றும் பிற கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகள் மூலமாக வெளியேறிவிடும் எனக் கூறுகிறார்கள் இதனைக் கடைப்பிடிப்பவர்கள். மேலும், டீடாக்ஸ் டயட்டைக் கடைப்பிடிப்பவர்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், அந்த உணவுகளின் மூலமே உடலில் நச்சுத்தன்மை சேர்கிறதென்பது அவர்களது நம்பிக்கை.
மருத்துவப்பூர்வ ஆதாரம் இருக்கிறதா?
நம் உடலில் சேரும் நச்சுக்களானது, நம் உடலின் இயற்கைான செயல்பாடுகள் மூலமே வெளியேறிவிடும், நச்சுத்தன்மையை வெளியேற்றுவதற்கென நாமாக எதுவும் செய்யத் தேவையில்லை எனக் கூறுகிறார்கள் மருத்துவர்கள். மேலும், டீடாக்ஸ் உணவுமுறையை மேற்கொள்வதன் மூலம் குறிப்பிட்டபடி நச்சுத்தன்மை வெளியேறும் என்பதை ஆதரிப்பதற்கான அறிவியல் பூர்வமான சான்றுகள் எதுவும் இல்லை. ஆனால், டீடாக்ஸ் உணவுமுறையின் கீழ் எடுத்துக் கொள்ளப்படும் உணவுகளால் நம் உடல் நன்மை பெறும் என்பதை நம்மால் மறுக்க முடியாது. அதேசமயம், இது மட்டுமே சிறந்த உணவுமுறை என்றும் நம்மால் கூற முடியாது. சரியான அளவில், சமபங்கு புரதங்கள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும் எந்த உணவுமுறையுமே சிறந்த உணவுமுறைதான். குறிப்பிட்ட உணவுமுறையைக் கடைப்பிடிப்பதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது சிறந்தது.