ஆயிரக்கணக்கான பழந்தின்னி வௌவால்களுக்காக தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காத கடலூர் அடரி கிராம மக்கள்
செய்தி முன்னோட்டம்
தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் வானை பிளக்கும் பட்டாசுகளின் சத்தமே நினைவுக்கு வரும். ஆனால், கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள அடரி கிராமத்தில் பல நூறு குடும்பங்கள் வசித்து வந்தாலும், கடந்த பல ஆண்டுகளாகத் தீபாவளியன்று அங்கு எந்தவொரு பட்டாசும் வெடிக்கப்படுவதில்லை. அதற்குக் காரணம், அங்குள்ள செல்லியம்மன் கோயில் தோப்பு மற்றும் உயரமான மரங்களில் வாசம் செய்யும் ஆயிரக்கணக்கான பழந்தின்னி வௌவால்கள் தான்.
பட்டாசுக்குத் தடை
உயிரினங்கள் மீதான அன்பு
சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழும் அடரி கிராம மக்கள், பகலில் மரங்களில் தலைகீழாகத் தொங்கி ஓய்வெடுத்து, இரவில் உணவு தேடும் இந்த வௌவால்களை தங்களது குடும்ப உறுப்பினர்களாகவே கருதுகின்றனர்.
பட்டாசுகளின் அதிவெடிச் சத்தம் மற்றும் புகையால் வௌவால்களின் இயல்பான வாழ்வியல் பாதிக்கப்படும் என்பதால், தீபாவளி மட்டுமன்றி சுப மற்றும் துக்க நிகழ்வுகளிலும் பட்டாசு வெடிப்பதை இவர்கள் முழுமையாகத் தவிர்த்து வருகின்றனர்.
மற்ற இடங்களில் பட்டாசு தவர்ப்பு என்பது சுற்றுச்சூழல் விழிப்புணர்வாகப் பார்க்கப்படும் வேளையில், அடரி மக்களுக்கு இது தங்களோடு வாழும் சக உயிரினங்கள் மீதான அன்பின் வெளிப்பாடாகும்.
பழமரங்கள் நடவு
உணவுக்காக பழமரங்களை நட்டு வளர்க்கும் கிராமத்தினர்
வௌவால்கள் தங்கள் கிராமத்தை விட்டுச் சென்றுவிடக் கூடாது என்பதற்காகவும், அவற்றுக்கு போதிய உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் அப்பகுதி இயற்கை ஆர்வலர்கள் ஒன்றிணைந்து மா, பலா, இலுப்பை மற்றும் தும்பைச் செடிகள் போன்ற பழமரங்களை நட்டுப் பராமரித்து வருகின்றனர்.
"பட்டாசு வெடிப்பதில் கிடைக்கும் தற்காலிக மகிழ்ச்சியை விட, ஓர் உயிரினத்தின் வாழ்விடத்தைப் பாதுகாப்பதில் கிடைக்கும் மனநிறைவே மேலானது. எங்கள் எதிர்கால தலைமுறைக்கும் இந்த இயற்கை நேசத்தைக் கற்றுக்கொடுத்து வருகிறோம்" என அடரி கிராம மக்கள் பெருமிதத்துடன் தெரிவிக்கின்றனர்.
பழந்தின்னி வௌவால்கள் பழங்களை உண்டு அவற்றின் விதைகளைப் பல்வேறு இடங்களுக்குப் பரப்புவதன் மூலம் புதிய தாவரங்கள் வளரவும், காடுகளின் இயற்கை மறுஉற்பத்திக்கும் பெரும் பங்காற்றுகின்றன. மேலும் பல தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கும் இவை துணைபுரிகின்றன.