வாரத்தின் முதல் நாளை உற்சாகமாய் துவங்க சில டிப்ஸ்!
பலருக்கும், வார இறுதி கொண்டாட்டங்கள் முடிந்து, வாரத்தின் முதல் நாளை துவங்குவது குறித்து பதட்டமாக இருக்கும். சிலருக்கு சோர்வும், சோகமும் கூட இருக்கும். அவற்றை போக்கி, நாளை உற்சாகமாக தொடங்க சில டிப்ஸ்: தூங்கச் செல்லும் நேரத்தை ஒழுங்குபடுத்துங்கள்: வார இறுதி நாட்கள் என்று காலையில் மெதுவாக எழுவதும், இரவில் தாமதமாக உறங்குவதும் கூடாது. எப்பொழுதும், ஒழுக்கமான தூக்க நேரத்தை கடைபிடிப்பது, உடல்நலத்திற்கு நல்லது என ஆராய்ச்சிகளும் தெரிவிக்கின்றன. இதனால், நாள் முழுவதும் உற்சாகமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருப்பீர்கள். ஞாயிறு இரவே, மறுநாளைக்கான வேலைகளை திட்டமிடுங்கள்: எப்போதும், முதல் நாள் இரவே, அடுத்த நாளைக்கான வேலைகளைத் திட்டமிடுதல், மறுநாள் உங்கள் வேலை பளுவை இலகுவாக்கும்.
எட்டு மணிநேர தூக்கம் அவசியம்
முன்னேற்பாடுகள் செய்யவும்: அதோடு, நீங்கள் மறுநாள் எடுத்து செல்ல வேண்டிய உடமைகள், பைல்கள், உணவிற்கான முன்னேற்பாடுகள் ஆகியவற்றை செய்வதால், உங்களுக்கு மனஅழுத்தம் குறையும். ஞாயிற்றுக்கிழமை சீக்கிரம் தூங்கி, திங்கட்கிழமை சீக்கிரம் எழுந்திருங்கள்: ஞாயிற்றுக்கிழமை இரவு ஏதேனும் கொண்டாட்டத்திற்கு நீங்கள் திட்டமிட்டால், திங்கட்கிழமை காலை எழுவது சிரமமாக இருக்க நேரலாம். எனவே, ஞாயிறு இரவு சீக்கிரம் படுக்கைக்குச் செல்ல முயற்சிக்கவும். குறைந்தது ஏழு-எட்டு மணிநேரம் தூங்குவதற்கு முயற்சிக்கவும். அதனால் திங்கள் காலை எழும் போது, சோர்வாக உணர மாட்டீர்கள். நேர்மறை எண்ணங்களை ஊக்குவிக்கும் விஷயங்களைச் செய்யுங்கள்: ஒரு நாளை, நேர்மறையாகவும், மகிழ்வாகவும் தொடங்கும் போது, உங்களுக்கு சோர்வாக இருக்காது. அதற்கான விஷயங்களை தேர்ந்தெடுங்கள். இதன் மூலம் உங்கள் வேலையில் செயல்திறனும் அதிகரிக்கும்.