உலக கொசு தினம்: கொசுக்களிடமிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?
செய்தி முன்னோட்டம்
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20ம் நாள் 'உலக கொசு தினமா'கக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கொசுக்களால் ஏற்படும் நோய்கள் குறித்தும், அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
1897ல், இதே ஆகஸ்ட் 20ம் நாளிலேயே, மனிதர்களிடையே மலேரியா நோய் பரவுவதற்கு, குறிப்பிட்ட வகைக் கொசுக்களே காரணம் என பிரிட்டிஷ் மருத்துவர் ரொனால்டு ராஸ் என்பவர் கண்டறிந்தார். இதனைத் தொடர்ந்தே, ஆகஸ்ட் 20ம் நாளை உலக கொசு தினமாகக் கடைப்பிடித்து வருகின்றனர்.
மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, சிகா வைரஸ் மற்றும் நைல் வைரஸ் உள்ளிட்ட நோய்கள் மனிதர்களிடையே, கொசுக்களாலேயே பரவுகின்றன. இந்த நோய்களால் ஒவ்வொரு ஆண்டு லட்சக்கணக்கானோர் உலகம் முழுவதும் உயிரிழந்து வருகின்றனர்.
வாழ்க்கை முறை
கொசுக்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?
கொசுக்களிடமிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள, எண்ணெய் மற்றும் கொசுக்களிடமிருந்து பாதுகாப்பளிக்கும் க்ரீம்களை உபயோகிக்கலாம்.
வெளியே செல்லும்போது, நம் முழு உடலையும் மறைக்கும் விதமான ஆடைகளை அணிந்து செல்வது கொசுக்களிடமிருந்து பாதுகாப்பு அளிக்க உதவும்.
நிலையாகத் தேங்கியிருக்கும் நீரில் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகும். நாம் இருக்கும் இடத்தைச் சுற்றி அவ்வாறு கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கலாம்.
நம் வீட்டினுள் கொசுக்கள் நுழையாமல் பாதுகாக்கும் வகையில், கொசு வலை அமைப்பது, நாம் தூங்கும் மெத்தை அல்லது தூங்கும் இடத்தைச் சுற்றி கொசு வலை அமைப்பது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
முக்கியமாக, கொசுக்களால் எவ்வாறு நமக்கு நோய்கள் பரவுகிறது மற்றும் அதனைத் தடுப்பது எப்படி என்பது குறித்து படித்து தெரிந்து கொண்டு, நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.